×

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட பசு சாணம் உதவும்: பாஜ பெண் எம்எல்ஏ பேச்சு

கவுகாத்தி: உலகளவில் மக்களை கொல்லும் கொரோனா வைரசை அழிக்க பசு சாணம் உதவும் என்று, பாஜ பெண் எம்எல்ஏ ‘யோசனை’ தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பரில் சீனாவின் வூஹானில் கொரோனா எனும் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்தக் காய்ச்சல், இன்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,056 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 2,943 பேரும், இதர நாடுகளில் 113 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 89,527 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசியாவைத் தாண்டி அமெரிக்கா, தென் கொரியா, இத்தாலி, ஈரானில் நோய் வேகமாக பரவி வருவதால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளாவிய இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், 70 நாடுகளில் கொரோனா பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே 2 ஆக இருந்த நிலையில் தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா, கால்நடை கடத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போது சட்டப்பேரவையில் கொரோனா வைரஸ் தொடர்பாக பேசினார்.

அப்போது;  உலகளவில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று வரும் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட பசு சாணம் உதவும். மாட்டு சாணம் மற்றும் மாட்டு சிறுநீர் குறித்து அரசு ஆராய்ச்சி செய்து வருகிறது. சாணம் எரிக்கப்படும் போது அதிலிருந்து வரும் புகை வைரசை அழிக்கும். மத சடங்குகளில் மாட்டு சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்துவதற்கு அறிவியல் ரீதியிலான காரணங்கள் உண்டு. குஜராத்தில் உள்ள சில மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளாக அவற்றை கொடுக்கின்றன. மாட்டு சாணம் மற்றும் சிறுநீரைப் பயன்படுத்தும் ‘மாற்று முறை’ மூலமாக புற்றுநோயை எதிர்த்துப் போராட முடியும்.

இதனால், பல புற்று நோயாளிகள் குணமடைவதை நான் அறிந்து கொண்டேன். நீரிழிவு நோயாளிகளுக்கு துளசி இலைகள் பயன்படுத்த வேண்டும். மாட்டு சாணம் மற்றும் மாட்டு சிறுநீரின் பயன் குறித்து பாஜக தலைவரும் அசாமின் நிதியமைச்சருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆராய்ச்சி செய்து வருகிறார் என கூறினார். எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா, முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிஜோயா சக்ரவர்த்தியின் மகள். இவர் அரசியலில் சேருவதற்கு முன்பாக திரைப்படத் தயாரிப்பு துறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : MLA ,Baja , Corona, Cow Dung, Baja Female MLA
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...