×

ம.பி.யில் காங். ஆட்சியை கவிழ்க்க சதி ஒரு எம்எல்ஏ.வுக்கு 35 கோடி பேரம்: பாஜ. மீது திக் விஜய் சிங் குற்றச்சாட்டு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க, ஒரு எம்எல்ஏவுக்கு 35 கோடி பேரம் பேசப்படுகிறது என்று இம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் பாஜ மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சி எம்எல்ஏ.க்களை குதிரைப் பேரம் மூலம் தங்கள் பக்கம் இழுப்பதை பாஜ வழக்கமாக கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த வரிசையில், முன்னதாக கோவா, அண்மையில் கர்நாடகா மாநிலங்களில் பாஜ அதன் கைவரிசையை காட்டி ஆட்சியை கைப்பற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க,  காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 35 கோடி வரை, மாநில பாஜ. பேரம் பேசுவதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் கூறியதாவது:

மாநில பாஜ தலைவர் சிவராஜ் சிங் சவுகானும் நரோட்டம் மிஸ்‌ரா இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது. ஒருவர் மீண்டும் முதல்வர், மற்றொருவர் துணை முதல்வராகும் கனவில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒவ்வொரு காங்கிரஸ் எம்எல்ஏ.வையும் தொடர்புக் கொண்டு 25 முதல் 35 கோடி வரை பேரம் பேசி வருகின்றனர். உண்மை இல்லாமல் குற்றம் சாட்டுவதில்லை. இதில் முதல் கட்டத்தில் முன்பணமாக 5 கோடி, 2வது கட்டமாக மாநிலங்களவைத் தேர்தலின்போது கட்சி மாறி வாக்களித்த பின், 3வது கட்டமாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் ஆட்சி கலைக்கப்பட்டதும் மீதத் தொகையை அளிப்பதாக இவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதுவொன்றும் கர்நாடகா அல்ல, மத்தியப் பிரதேசம். எங்களுடைய எம்எல்ஏ.க்கள் யாரும் விலை போக மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், திக்விஜய் சிங்கின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் முதல்வரும், மாநில பாஜ தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், முதல்வர் கமல்நாத்தை பிளாக் மெயில் செய்வதற்கு திக்விஜய் சிங் விரும்புகிறார். பொய், வதந்திகளை பரப்புவதில் அவர் கை தேர்ந்தவர். கட்சிக்கும், ஆட்சிக்கும் தான் மிகவும் தேவையானவர், முக்கியமானவர் என்பதை காட்டவும், ஒருவரை  மிரட்டி கொடுமைப்படுத்தவும் அவர் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளார்’’ என்றார்.

Tags : MLA ,Baja Digvijay Singh , Madhya Pradesh, Congress rule, Bjp, Dik Vijay Singh
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...