×

சென்னை பல்கலைக்கழகத்திற்கு டெல்லி ஜேஎன்யு சர்ச்சை துணை வேந்தர் நியமனமா?...பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்திற்கு டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழத்தின் சர்ச்சை துணை வேந்தர் நியமனம் செய்யப்பட உள்ளதாக பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பி.துரைசாமியின் மூன்று ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதத்தில் முடிவடைகிறது. அதையடுத்து புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த லிஸ்டில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) துணைவேந்தர் எம்.ஜகதேஷ்குமாரை சென்னை பல்கலைக்கழகத்திற்கான புதிய துணைவேந்தராக நியமிக்க தேடுதல் குழு மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரமுடைய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, எம்.ஜகதேஷ்குமாரின் பெயரை பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜேஎன்யு-வில் துணை வேந்தர் ஜகதேஷ்குமாரின் பதவிக்காலம் சர்ச்சையில் இருப்பதால், அவரை சென்னை பல்கலைக்கு நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
 
இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: ஜேஎன்யு-வின் துணைவேந்தராக எம்.ஜகதேஷ்குமார் நியமிக்கப்பட்டதிலிருந்து, அங்கு மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அவரது நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட கட்டண உயர்வு உள்ளிட்ட முடிவுகளுக்கு மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வளாகத்திற்குள் மாணவர்கள் மீது குண்டர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மாணவ பிரதிநிதிகளை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். மேலும், அவர் மத்திய பாஜ அரசுடன் நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது, நடுநிலையான நபராக எம்.ஜகதேஷ்குமார் எப்படி இருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியும். தமிழகத்தில் போதுமான உயர்கல்வியாளர்கள் உள்ளனர். ஒரு மாநில பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தராக டெல்லியில் இருந்து ஒரு கல்வியாளரை அழைத்து வரவேண்டிய அவசியமில்லை. ஜகதேஷ்குமார் சென்னை ஐ.ஐ.டி-யில் முதுநிலை மற்றும் பி.எச்.டி படித்தார். 2016ல் ஜேஎன்யு-வின் துணைவேந்தராக பொறுப்பேற்பதற்கு முன்பு டெல்லி ஐ.ஐ.டி-யில் பணியாற்றினார். மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.மருதமுத்து மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பி.ராமசாமி ஆகியோர் செனட் மற்றும் சிண்டிகேட் வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அரசின் உத்தரவுக்குப் பிறகு, மூன்று பேர் கொண்ட குழு, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Vice-Chancellor ,Chennai University ,University of Madras ,JNU ,Delhi , University of Chennai, Delhi JNU, Vice Chancellor, Prof.
× RELATED பெரியார் பல்கலையில் பல்வேறு...