×

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்காவிட்டால் வருங்காலத்தில் அதனை வரைபடத்தில் தான் பார்க்க முடியும்: உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை

மதுரை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் எந்தெந்த பகுதிகளில் கழுவுநீர் கலக்கிறது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தாமிரபரணி ஆற்றை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். அதனை முறையாக பாதுகாக்காவிட்டால் வருங்காலத்தில் அதனை வரைபடத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருநெல்வேலியை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி சுமார் 125 கிலோ மீட்டர் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்று நீரால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் சில பகுதிகளில் தொழிற்சாலை கழிவு நீர் கலக்கிறது.

இதனால் தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றை குடிநீராக பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய் தொற்றுகளும், உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. எனவே தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நவீன இயந்திரங்கள் உதவியுடன் சுத்திகரிப்பு செய்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நோய்கள் பரவாமல் தடுக்கலாம். இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆதலால் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீரை மறுசுயற்சி செய்யவும், மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்திரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் நெல்லை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வழக்கறிஞரின் கையெழுத்து மற்றும் பெயர் உள்ளிட்டவை இல்லை. இதையடுத்து அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நெல்லை தாமிரபரணி ஆற்றை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பாக வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக பாதுகாக்காவிட்டால் வருங்காலத்தில் அதனை வரைபடத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வழக்கில் நெல்லை மாநகராட்சி ஆணையரை நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்த்து உத்தரவிடுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது என தெரிவித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது? ஆக்கிரமிப்புகள் உள்ளது? அவற்றை அகற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : river ,Tamraparani ,High Court ,Tamraparani River , Tamraparani, Future, Map, High Court Branch Warning
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...