×

அவினாசி சாலை விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் எதிரொலி: சாலை பாதுகாப்பை ேமம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தயாநிதிமாறன் எம்பி கடிதம்

சென்னை: அவினாசி சாலை விபத்தில் 20 பேர் பலியான சம்பவத்துக்கு சாலை பாதுகாப்பில் உள்ள குறைபாடே காரணம் என குற்றம்சாட்டியுள்ள தயாநிதி மாறன் எம்பி சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் அருகே அவினாசியில் கடந்த 20ம் தேதி நடந்த சாலை விபத்தில் 20 பேர் பலியாகினர். சேலம் - கொச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 544ல் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சாலையில் சென்ற லாரி சென்டர் மீடியனில் ஏறி சென்றதால் லாரியில் இருந்த 30 டன் எடைகொண்ட கண்டெய்னர் எதிரே வந்த கேரள சாலை போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் மீது விழுந்து நசுக்கியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 20 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியன் மிக குறைந்த உயரத்தில் இருப்பதே காரணம் என மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சாலை பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தி தயாநிதிமாறன் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: அவிநாசி பகுதியில் உள்ள ேதசிய நெடுஞ்சாலை 544, அதிக பயணிகள் போக்குவரத்து, வர்த்தக போக்குவரத்து நடைபெறும் பகுதியாகும். அப்பகுதியில் உள்ள 6 வழிச்சாலை தொடங்கும் பகுதியில் கடந்த 20ம் தேதி அதிகாலை 3.15க்கு விபத்து நடந்துள்ளது. அப்போது லாரி, அந்த சாலையில் வெறும் ஒரு அடி உயரத்துக்கு இருந்த சென்டர் மீடியனில் தறிகெட்டு ஓடியபோது, எதிர்பாராத விதமாக அதில் இருந்த கண்டெய்னர் எதிரே வந்த பஸ் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிவிரைவு சாலைகளில் போதுமான பாதுகாப்பை ஏற்படுத்தாமல் அலட்சியம் செய்துள்ளதே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பாக 6 வழிச்சாலைகளில் ஒரு அடி உயர சென்டர் மீடியன் போதுமானது என நெடுஞ்சாலை ஆணையம் நினைத்தது எப்படி? சாலைகளில் அதிகப்படியான சுங்கவரி வசூலிக்கும் மத்திய அரசு முறையான சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்?. இந்த விபத்து மேலும் ஒரு விபத்து என்றில்லாமல் மீண்டும் இதுபோன்ற விபத்துக்கள், உயிரிழப்புகள் இனி நடைபெறாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும். இதற்காக சாலைகளின் தரத்தை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நெடுஞ்சாலைகள் அதிவிரைவு சாலைகளில் நன்கு திட்டமிட்டு சென்டர் மீடியன்கள் மற்றும் சாலையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Dayanidhimaran ,Nitin Gadkari ,road accident ,Echo ,Avinashi , Road Safety, Union Minister Nitin Gadkari, Dayanidhimaran MP, letter
× RELATED தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி