×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி திடீர் மரணம் இழப்பீடு கோரி வழக்கு

மதுரை:  ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு சேர்ந்த பெண் திடீரென மரணமடைந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கில், சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், வடபழஞ்சி புதுப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை
கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி ரம்யா கிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றினார். அவர் கர்ப்பமானதால் நாகமலை புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனையில் இருந்தார். வளைகாப்பிற்கு பிறகு விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திரபுரத்திற்கு சென்றார். அதன்பிறகு கிருஷ்ணன்கோயில் அருகே குன்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்தார். பிரசவத்திற்காக கடந்தாண்டு அக். 9ல் சேர்ந்தார்.

பரிசோதித்த டாக்டர்கள், தாயும், குழந்தையும் நல்ல நிலையில் இருப்பதால் சுக பிரசவம் ஏற்படும் எனக்கூறினர். 11ம் தேதி பரிசோதித்துவிட்டு அறுவை சிகிச்சைக்கான மருந்துகளை வெளியில் வாங்கித் தருமாறு அறிவுறுத்தி உள்ளனர். மருந்துகளை வாங்கி வந்தபோது, திடீரென என் மனைவியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றனர். மதுரைக்கு அழைத்து சென்றபோது என் மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை அளிக்காததால், அவர்களின் அலட்சியத்தால் தான் என் மனைவி இறந்துள்ளார். புகாரின் பேரில் கிருஷ்ணன்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, மனு குறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர், விருதுநகர் கலெக்டர், எஸ்பி மற்றும் மதுரை டீன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தார்.


Tags : Pregnancy Sudden Death ,Early Health Center Early Health Center , In the case of seeking compensation for the sudden death of a woman from childbirth at the initial health center
× RELATED காங்கிரஸ் நிர்வாகி படுகொலை சிபிஐ...