×

எர்ணாவூரில் அடிப்படை வசதி செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்: குடியிருப்போர் நலச்சங்கம் தீர்மானம்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூரில் பிருந்தாவன் நகர், காந்தி நகர், கிரிஜா நகர், கன்னிலால் லே-அவுட், நியூ காலனி என 30க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் அந்தந்த வீடுகளில் தொட்டி அமைத்து, அதில் கழிவுநீரை தேக்கி, பின்னர் அவற்றை கழிவுநீர் அகற்று லாரிகள் மூலம் அதிக கட்டணம் செலுத்தி அகற்றி வருகின்றனர்.மேலும், இப்பகுதிகளில் மழைநீர் கால்வாய் இல்லாததால், மழை காலத்தில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதியில் தேங்குவதுடன், வீடுகளிலும் புகுந்துவிடுகிறது.  இதுதவிர, இங்குள்ள வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும், இதுவரை அதில் தண்ணீர் வருவதில்லை. ஆனால், அதற்கான வரியை மட்டும் மக்கள் செலுத்தி வருகின்றனர்.

குறைந்தளவில் லாரிகளில் வரும் குடிநீரை மக்கள் நீண்ட வரிசையில் நின்று பிடிக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இங்குள்ள தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவில் இருள் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மண்டல அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் புகார் தெரிவித்தும், இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், எர்ணாவூர் பகுதி அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் எர்ணாவூரில் நடைபெற்றது. இதில், எர்ணாவூரில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக போராடி வரும் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, எர்ணாவூர் பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மண்டல அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து எர்ணாவூர் பகுதி அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags : corporation ,Ernakulam , Ernakulam, Municipal Administration, Struggle, Resident Welfare
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...