×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஜீன்ஸ், டவுசர், லெக்கின்ஸ், டி-சர்ட் அணிய திடீர் தடை: கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஜீன்ஸ்,  டவுசர், லெக்கின்ஸ், டி-சர்ட் அணிய கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. சிவ  தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இந்த  கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினமும் இக்கோயிலுக்கு  தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் சில ஆண்  பக்தர்கள் டவுசர், டிராக் பேண்ட், பெண் பக்தர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட், டாப்,  லெக்கின்ஸ் அணிந்து வருகின்றனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களில்  ஒரு தரப்பினருக்கு சங்கடம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.  சமீபத்தில் வட மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த ஆண்,பெண் பக்தர்கள் டவுசர், டீ-சர்ட்  லெக்கின்ஸ் அணிந்து வந்தனர். இது தொடர்பாக கோயிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து பக்தர்கள், கோயில் நிர்வாகத்திடம் புகார் செய்ய ஆரம்பித்தனர். பாரம்பரியமான ஆடைகளை அணிந்து கோயிலுக்கு வந்தால் புனிதம் கெடாமல் பாதுகாக்க முடியும். இதுபோன்று ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து வந்தால் எங்களுக்கு மன சங்கடம் ஏற்படுகிறது என்று தெரிவித்து வந்தனர். இதை  தொடர்ந்து  கோயில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் பார்க்கும் வகையில்   அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘திருக்கோயிலுக்கு வரும்  ஆண் பக்தர்கள் வேட்டி, சட்டை, முழுக்கால் பேண்ட், சர்வாணி ஆகிய பாரம்பரிய  உடைகளை அணிந்து வரவேண்டும். கைலி, அரைக்கால் டவுசர் அணிந்து வரக்கூடாது.  பெண் பக்தர்கள் சேலை - ரவிக்கை, பாவாடை - தாவணி, சுடிதார், துப்பட்டா,  பஞ்சாபி உடை அணிந்து வரவேண்டும் பனியன் டி-ஷர்ட், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட்,  லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து வரக்கூடாது. துப்பட்டா அணியாமல் மேல் சட்டையை  மட்டும் அணிந்து வரக்கூடாது. கண்டிப்பாக துப்பட்டா அணியவேண்டும்” என்று  அறிவிப்பு பலகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள்  வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Pilgrims ,Mayapur Temple Pilgrims ,Mayapur Temple , Pilgrims ,visiting, Mayapur Temple
× RELATED சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்...