×

இந்தியன் 2 படப்பிடிப்பில் 3 பேர் பலி விவகாரம் பாதுகாப்பு விதியை பின்பற்றும் ஸ்டூடியோவில் மட்டுமே தொழிலாளர்கள் பணிபுரிவார்கள்: பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திரை துறையில் 20 அடி, 40 அடி கிரேன்களை பயன்படுத்தினர். இவை திரைப்படத்துறையால் உருவாக்கப்பட்ட உபகரணங்கள். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று திரைப்பட தொழிலாளர்களுக்கு தெரியும். இப்போது 60 அடி, 100 அடி, 200 அடி உயரத்தில் இருந்து படமாக்க விரும்புகின்றனர்.
ஆனால், அதற்கு சரியான உபகரணங்கள் திரைத்துறையில் இல்லை. எனவே, தொழில்துறையில் இருந்து கிரேன்கள் வரவழைத்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த கிரேன்களை எப்படி இயக்க வேண்டும் என்ற தொழில்நுட்ப அறிவு இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு இல்லை. அதனால்தான் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. திரைத்துறை சாராத உபகரணங்களை உபயோகிக்கும்போது, அதை பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கும், திரைத்துறை தொழிலாளர்களுக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு, உரிய அனுமதி பெற்ற பிறகே படப்பிடிப்புக்கு செல்வது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். இது சமீபத்தில் நடந்த விபத்தில் இருந்து அனைவரும் கற்றுக்கொண்ட பாடம்.

ஈவிபி ஸ்டூடியோவில் ‘காலா’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. பிறகு ‘பிகில்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இப்போது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
இனிமேல் ஸ்டூடியோக்களில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் இருக்கிறது என்று தெரிந்த பிறகு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதற்கு பிறகே படப்பிடிப்பில் பணியாற்ற முடிவு செய்துள்ளோம். பாதுகாப்பு விதிகளை மீறும் ஸ்டூடியோக்களில் படப்பிடிப்பு நடத்த  மாட்டோம். உயிரிழந்த எஸ்.ஆர்.சந்திரன், மது ஆகியோருக்கு அந்தந்த சங்கம் சார்பில் தலா 6 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுகிறது. மேலும், ‘இந்தியன் 2 படக்குழு சார்பிலும் காப்பீடு தொகை கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : studios ,RK Selvamani ,Pepsi ,shooting ,India ,PepsiCo , PepsiCo leader, RK Selvamani ,announces,workers will only ,three people ,killed
× RELATED கன்னடத்தில் அறிமுகம் ஆகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்