×

கொரோனா ஒரு நாள் பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: சாலைகள் வெறிச்சோடின; 250 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை

சென்னை: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நேற்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதும் 250 சோதனை சாவடிகள் அமைத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து வானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரவு 9 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதும் ஆட்கள் இன்றி முக்கிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடியது.நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வரலாறு காணாத வகையில் 2.73 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,619 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சத்தை தொட்டு வருகிறது. நாள்தோறும் சராசரி பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் ஏற்கனவே இரண்டு முறை சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல், 20ம் தேதி முதல் வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் நாள் இரவு முழு ஊரடங்கு நேற்று நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசு பிறப்பித்துள்ள விதிகளின் படி இரவு 10 மணிக்கு மேல் அனைத்து வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டது. இரவு 9 மணியுடன் அனைத்து ஓட்டல், தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அரசு அனுமதி அளித்த மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி போன்றவை இயங்க போலீசார் அனுமதி அளித்தனர். பெட்ரோல் பங்க்குகள் மட்டும் வழங்கம் போல் இயங்க போலீசார் அனுமதி அளித்தனர். சென்னையில் இருந்து மாவட்டங்கள் மற்றும் பிற நகரங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக இரவு 10 மணிக்குள் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று சேரும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. வழக்கமாக இரவு நேரங்களில் இயக்கப்படும் தொலைதூர பஸ்கள் இயக்கப்படவில்லை. பகலில் மட்டும் தொலைதூர அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதுவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் வெறிசோடி காணப்பட்டது. தொலைதூரத்துக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் பிற்பகல் 2 மற்றும் 3 மணியுடன் நிறுத்தப்பட்டது. அதிகாலை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கம், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம் போன்ற பெரு நகரங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தொலைதூரங்களுக்கு செல்லும் மக்கள் ரயிலில் பயணம் செய்தனர். இதனால் எழும்பூர், சென்ட்ரல், என அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று இரவு 8 மணி முதல் இரவு 9 மணிக்குள் கடைகளும் வியாபாரிகள் மூடினர். அரசு உத்தரவிப்படி இரவு 9 மணிக்கு மூடாத கடைகள் மீது அந்தந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.  திட்டமிட்டப்படி இரவு 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகள் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. அதேபோல், அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. 10 மணிக்கு மேல் சாலைகளில் சென்ற அனைத்து சரக்கு வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே பாதுகாப்பாக சாலையோரம் அதன் ஓட்டுநர்கள் நிறுத்தினர்.விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் டிஜிபி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீஸ் உயர் அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் கண்காணித்தனர். மாவட்ட எல்லைகளில் அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு மற்றும் வாகன சோதனை பணிகளை பார்வையிட்டனர். விதிகளை மீறிய வாகனங்கள் பறிமுதல் செய்தனர். சென்னையை பொறுத்தவரை அண்ணாசாலை உட்பட அனைத்து சாலைகளும் இரவு 10 மணிக்கு போலீசார் தடுப்புகள் அமைத்து மூடினர். 38 மேம்பாலங்களும் மூடப்பட்டது. அண்ணாசாலையில் சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை உள்ள அனைத்து இணைப்பு சாலைகளையும் போலீசார் தடுப்புகள் அனைத்து மூடினர். அதேபோல் தாம்பரம் முதல் கோயம்பேடு வரை 100 அடி சாலையில் உள்ள அனைத்து இணைப்பு சாலைகளும் மூடப்பட்டது. விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் அனைத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் சென்னை முழுவதும் ஆட்கள் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. பின்னர் இன்று காலை வழக்கம் போல் 4 மணிக்கு அனைத்து வாகனங்கள் இயங்கும் வகையில் அனைத்து சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் இடையே போடப்பட்ட தடுப்புகள் அனைத்தும் போலீசார் எடுத்து மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினர்.மாநிலம் முழுவதும் உள்ள பொழுது போக்கு பூங்காங்கள், சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, கன்னியாகுமரி, மாமல்லபுரம் அனைத்தும் மூடப்பட்டன. கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட சிறிய பூங்காக்களில்தான் பொதுமக்கள் காலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை முதலே அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் நேற்று சாலைகளில்தான் நடைபயிற்சி சென்றனர். சென்னையில் இருந்து கூலி தொழிலாளர்கள் வட மாநிலங்களுக்கு கடந்த 3 நாட்களாக சென்ற வண்ணம் இருந்தனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். இதனால், நேற்று காலை முதலே சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குறைந்த அளவே வாகனங்கள் இயங்கின. இரவில் முற்றிலுமாக வாகனங்கள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த ஊரடங்கை வரும் காலங்களில் தொடர்ந்து தீவிரமாக கடைப்பிடிக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்….

The post கொரோனா ஒரு நாள் பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்: சாலைகள் வெறிச்சோடின; 250 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Night ,Tamil Nadu ,Chennai ,Corona ,day ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம்...