×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை: குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கிழக்கு ராமாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் தற்போது உதவி வட்டாட்சியர், உதவி வணிக வரி அலுவலர் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர் போன்ற பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். தொடர்ந்து, 2011ம் ஆண்டே குரூப் 2 தேர்வு முறைகேடு குறித்த சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக தவமணி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் தற்போது மற்றொரு வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது. அதில் பல்வேறு உயர் பதவிகளில் இருக்கும் 12 பேரும் ஒரே கிராமத்தில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதனால் இவர்களின் தேர்ச்சியில் சந்தேகம் எழுவதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சென்னை சிபிசிஐடி அலுவலகத்திலிருந்து கடலூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு ஒரு அறிக்கை அளிக்கப்பட்டு தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது ராமாபுரத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 12 பேரும் வருகின்ற 19ம் தேதி காலை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடலூர் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் தீபா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்மன் கிடைக்கப்பெற்ற 12 பேரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tienpiesci CBCID ,selection scandal ,group ,Group 2 , DNPSC, Group 2 Examination, Abuse, 12 People, CBCID, Summon
× RELATED குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத்...