×

பணம் இல்லை என்பதால் கருப்பு பட்டியலில் 30 லட்சம் பாஸ்டேக் ஸ்டிக்கர்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: நாடு முழுவதும் 527 சுங்கசாவடிகளில் காத்திருக்காமல் வாகனங்கள் வேகமாக கடந்து செல்லும் வகையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் எனப்படும் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அமல்படுத்தியது. இதன் மூலம் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களிடம் இருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விடும். இதன் மூலம் காலநேரம், எரிபொருள் விரயம் ஆவது மிச்சமாகும். இந்த திட்டத்துக்கான பாஸ்டேக் ஸ்டிக்கர் அனைத்து சுங்கச்சாவடியிலும் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது வரை 2.50 கோடிக்கு மேற்பட்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் விநியோகிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்கேனர் சரியாக செயல்படவில்லை என தெரிகிறது. இதனால், பாஸ்டேக் ஸ்டிக்கருக்கு பதிலாக வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் பணமாக தருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஸ்டேக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைவரையும் பாஸ்டேக் ஸ்டிக்கர் பயன்படுத்தும் வகையில், நேற்று முதல் ஒரு சில சுங்கச்சாவடிகளில் தனியார் நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த சுங்கச்சாவடிகளில் சிறப்பு கவுன்டர்கள் அமைத்து வரும் 29ம் தேதி வரை பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பாஸ்டேக் ஸ்டிக்கரில் பணம் இல்லை எனக்கூறி சுங்கச்சாவடியில் பாஸ்டேக் வழித்தடத்தில் சென்ற 30லட்சம்  வாகனங்கள் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் பணம் செலுத்தினால் கூட 24 மணி நேரம் கழித்து தான் தானாகவே மீண்டும் அந்த ஸ்டிக்கர் செயல்பாட்டுக்கு வருகிறது.

இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், பாஸ்டேக் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை வாகன ஓட்டிகள் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. சிலர் பாஸ்டேக் ஸ்டிக்கர் ரத்து செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, ‘பாஸ்டேக் பயன்படுத்துவதன் மூலம் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்த்தோம். மாறாக பாஸ்டேக் ஸ்கேனர் பல இடங்களில் வேலை செய்யாததால் அதற்கு சென்சார் கிடைக்கும் வரை வாகனம் நிற்க வேண்டியுள்ளது.  இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது. எனவே தான் பலரும் பாஸ்டேக் பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்றனர். மேலும், இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர் ஒருவர் கூறும் போது, ‘சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் கூடுதலாக வசூலிப்பது தெரிய வந்தால் 1033 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஒரு வாகனம் 24 மணி நேரத்திற்குள் திரும்ப வந்தால் அந்த வாகனத்துக்கு உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். 24 மணி நேரம் மேல் சென்றால் மீண்டும் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும்’ என்றார்.

Tags : motorists , 30 lakhs black list, pasta sticker, motorists, shock
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...