×

அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?: பரபரப்பு தகவல்கள்

சென்னை: வண்ணாரப்பேட்டையில் போராடியவர்கள் மீது திடீரென்று தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? ஏன் தடியடி நடத்தினார்கள் என்ற பரபரப்பு தவகல்கள் வெளியாகியுள்ளன. சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாகவே வெள்ளிக்கிழமையன்று மசூதியில் சிறப்பு தொழுகை முடிந்ததும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டிருந்தனர். அதேபோலத்தான், நேற்று முன்தினமும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆண்கள் குறைவாகவே இருந்தனர். பெண்களும், குழந்தைகளும் அதிகமாக இருந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் இரவு வரை நடந்ததால், அவர்களை கலைந்து செல்லுமாறு துணை கமிஷனர் தலைமையிலான போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டது.அப்போது, போராட்டத்தில் முன் பகுதியில் இருந்த ஆண்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். இதற்காக அவர்களை கைது செய்வதாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்தனர். இதனால் அவர்களை இழுத்துச் சென்று கைது செய்வது என்று முடிவு செய்தனர். அங்கிருந்த உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, துணை கமிஷனர் சுப்புலட்சுமியே நேரடியாக சென்று போராட்டக்காரர்களை ஒவ்வொருத்தரின் சட்டையைப் பிடித்து இழுத்து கைது செய்யத் தொடங்கினார். அவர் ஒவ்வொருவரையும் இழுத்து கீழே தள்ளியவுடன், மற்ற போலீசார் அவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. சிலரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினர். அதில் பலருக்கு மண்டை உடைந்தது. கை, கால் எலும்புகள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் போராட்டக்காரர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பதட்டமும் ஏற்பட்டது.

இதனால், இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் இருந்த பகுதியில் இருந்து போலீசார் மீது கல் வீசப்பட்டன. அதில் இணை கமிஷனர் விஜயகுமாரி உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடியை அந்தப் பகுதியின் சட்டம் ஒழுங்கு பொறுப்பாளரான துணை கமிஷனர் சுப்புலட்சுமி தடியடி நடத்த உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்தே போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தடியடி நடந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இணை கமிஷனர் கபில்குமார் சரத்கர் தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த நேரத்தில் நெல்லை சரக டிஐஜியாக இருந்தவர். தூத்துக்குடியின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும் இருந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். துணை கமிஷனர் சுப்புலட்சுமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்ட எஸ்பியாகவும், சேலம் நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும் பதவி வகித்தவர். ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று போலீசாரால் கூறப்படுகிறவர். சேலத்திலும் பல இடங்களில் தடியடி நடத்தியவர். இவர்கள் பாதுகாப்பில் இருந்தபோதுதான் தடியடி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால்தான் தற்போது 2வது நாளாக மறியல் போராட்டம் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags : Who fought quietly, the bearded, ordered, who?
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...