×

3வது கண்ணால் கதி கலங்கும் கொள்ளையர்கள் திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இடத்தை மாற்றிய கொள்ளையர்கள்

* சென்னையைப்போல மாறுமா புறநகர் மாவட்டங்கள்
* கேமராக்களை பொருத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தன. குறிப்பாக செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தது. சென்னையில் பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. கோயிலுக்கும் நகையை மறைத்தபடியே பயந்த நிலையிலேயே சென்றுவந்தனர். பைக்கில் செல்லும் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் செயினை பறித்து விட்டு தப்பி வந்தனர். அதேபோல, பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து, அவர்களை கண்காணித்துச் சென்று பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

அதேபோல ரவுடிகளும் தங்கள் எதிரிகளை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச் சாய்ப்பது. துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது போன்ற சம்பவங்களும் நடந்தன. இதனால் கொலை, கொள்ளைகளை தடுக்க நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முடிவு செய்தார். அது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். பின்னர் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது என்று முடிவு செய்தார். அதோடு நில்லாமல், ஒவ்வொரு கடையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஏன் தனிப்பட்ட வீடுகளிலும் கேமராக்களை பொருத்துவதன் அவசியம் குறித்து சென்னை போலீஸ் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதனால், சென்னை நகர் முழுவதும் போலீசார் மற்றும் அவர்களது ஏற்பாட்டின்பேரில் 2.5 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்து விதி மீறல்கள் அனைத்தும் இந்த கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றன. அதில் அண்ணா நகரில் உள்ள சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறினால் உடனடியாக கேமராக்கள் மூலம் கண்டறிந்து, தானாகவே விதி மீறல்களை கண்டுபிடித்து, அவர்களது வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் அண்ணாநகரில் உள்ள சாலைகளில் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பது இல்லை. இந்த பணிகள் மற்ற சாலைகளிலும் அமல்படுத்த போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் சாலைகளில் விதி மீறல்கள் பெருமளவில் குறைந்து வருகின்றன.

அதேபோல, நகரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்களும் குறைந்து வருகின்றன. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் குற்றவாளியை போலீசார் எளிதல் கண்டறிந்து, அவர்களை கைது செய்து விடுகின்றனர். இதனால் குற்றவாளிகள் சென்னையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. அவர்கள் எல்லாம் தற்போது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமர்ந்து கொண்டு, தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனால்தான் இந்த இரு மாவட்டங்களிலும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதில் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொலைகள் அதிகமாக நடக்கின்றன. குறிப்பாக ரவுடிகள் மோதலில் அதிக கொலைகள் நடக்கின்றன. பட்டப்பகலில் வெடிகுண்டுகளை வீசியும் கொலை செய்கின்றனர். இந்த வழக்குகளில் கூட குற்றவாளிகளை போலீசாரால் எளிதில் பிடிக்க முடியவில்லை. அதேபோல, திருவள்ளூர் மாவட்டங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மீஞ்சூர், பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் அதிக அளவில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரிக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய இடங்களில் கொள்ளைகள் அதிகமாக நடக்கின்றன.

இந்த கொள்ளை சம்பவங்களுக்கு முக்கிய காரணம், கொள்ளையர்கள் சென்னை நகரை காலி செய்து விட்டு பக்கத்து மாவட்டங்களில் தஞ்சமடைந்ததுதான் காரணம் என்கின்றனர் சென்னை நகர போலீசார். இந்த இரு மாவட்டங்களில் எங்குமே கேமராக்கள் காணப்படவில்லை. இது குறித்த விழிப்புணர்ச்சியை மாவட்ட போலீசார் ஏற்படுத்தவில்லை. போலீசாரும் கேமரா அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் குற்றங்கள் நடந்து பல மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஒரு குற்றம் நடந்தால், அதை விசாரிக்கும் போலீசார், பின்னர் மற்றொரு குற்றம் நடந்தவுடன் பழைய குற்றத்தை கண்டுபிடிக்க முடியாமல், அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக சென்னைக்கு அருகில் உள்ள பகுதிகளிலாவது கேமராக்கள் பொருத்த திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் முயற்சிக்க வேண்டும்.

போலீசாரால் குற்றங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போலீசார் குற்றங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல், பொதுமக்களை திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. தொடர்ந்து வந்து புகார் செய்து வந்தால், உண்மையான பாதிப்புகளை வழக்காக பதிவு செய்யாமல், பெயருக்கு கொள்ளை போனதாக வழக்குப்பதிவு செய்யும்நிலைதான் இந்த இரு மாவட்டங்களிலும் உள்ளது. இதனால் உடனடியாக கேமராக்கள் பொருத்தினால் குற்றவாளிகளை எளிதாக கைது செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டாலும், தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்று பயந்தாவது குற்றவாளிகள் வேறு மாவட்டங்களுக்கு தப்பிச் செல்வார்கள். இதனால்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கேட்டாவது பக்கத்து மாவட்ட அதிகாரிகள் அந்த திட்டத்தை அமல்படுத்த முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : thieves ,Kanchipuram ,Thiruvallur , 3rd Eye, Kathi Malan, Robbers, Thiruvallur, Kanchipuram, Robbers
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...