×

ரூ.499 கோடி செலவில் திட்ட அறிக்கை தயார் தமிழகத்தில் 1364 ஏரிகளை புனரமைக்க முடிவு

* ஜூன் 30க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம்
* அரசு நிதி ஒதுக்கீட்டுக்கு காத்திருப்பு

சென்னை: தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 14,098 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக முறையாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கரைகள் பலவீனமடைந்தும், மதகுகள் சேதமடைந்தும், ஏரிகள் தனது முழு கொள்ளளவை இழந்தும் காணப்படுகிறது. இந்த ஏரிகளை மீட்டெடுக்கும் வகையில், குடிமராமத்து திட்டம் கடந்த 2016ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏரிகள், கால்வாய்கள் மற்றும் வரத்துவாய்க்கால்களை பராமரித்தல், மதகுகள், மிகை நீர் கலிங்குகள் மறு கட்டுமானம் செய்தல், ஏரிக்கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் விவசாய சங்கங்கள்/பாசன சபைகள்/ ஆயக்கட்டுதாரர்களின் உதவியுடன் செய்யப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக கடந்த 2016ல் ரூ.100 கோடி செலவில் 30 மாவட்டங்களில் 1519 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது கட்டமாக 2017-18ல் 29 மாவட்டங்களில் ரூ.328.95 கோடி செலவில் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில், 50க்கும் மேற்பரட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2019-2020ல் 29 மாவட்டங்களில் ரூ.500 கோடி செலவில் 1829 ஏரிகள் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கடந்த ஜூன் மாதம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்பேரில் 600க்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட ஏரிகளில் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் 5 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாத ஏரிகளை கண்டறிந்து அந்த ஏரிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார தலைமை பொறியாளர் தனபால் தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் சார்பில், எந்தெந்த ஏரிகளில் என்னென்ன புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ரூ.499 கோடி செலவில் 1364 ஏரிகள் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில், நிதி ஒதுக்கீடு செய்தவுடன் இப்பணிகளை தொடங்க தயாராக இருக்கிறோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : lakes ,Tamil Nadu , Rs. 499 Crore Cost, Project Report, 1364 lake in Tamil Nadu
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...