×

குரூப்4 தேர்வு முறைகேடு ஆசிரியர் உட்பட 2 பேர் கோர்ட்டில் சரண் : 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு

சென்னை: குரூப்4 தேர்வு முறைகேட்டு வழக்கில் ஓடும் வாகனத்தில் விடைத்தாள்களை திருத்த சரியான விடைகளை ஜெயகுமாருக்கு குறித்து கொடுத்த ஆசிரியர் உட்பட 2 பேர் நீதிமன்றங்களில் ேநற்று சரணடைந்தனர். டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து முக்கிய குற்றவாளிகளான டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளாக் ஓம்காந்தன், உதவி ஆய்வாளர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயகுமார் மற்றும் முறைகேடாக பணம் கொடுத்து தேர்வு எழுதி பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வந்த அரசு ஊழியர்கள் உட்பட ேநற்று வரை 46 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தேர்வு முறைகேட்டிற்கு ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய நபர்களின் விடைத்தாள்களை திருத்த அதற்கான விடைகளை குறித்து கொடுத்த திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஆசிரியர் செல்வேந்திரன்(45) என்பவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகவே இருந்து வந்தார். தேர்வு விடைகளை குறித்து கொடுக்க செல்வேந்திரன் பல லட்சம் பணத்தை இடைத்தரகர் ஜெயகுமாரிடம் இருந்து பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர் செல்வேந்திரனை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள ஜார்ஜ் டவுன் விரைவு நீதிமன்றத்தில் நேற்று மதியம் சரணடைந்தார். பின்னர் நீதிபதி செல்வேந்திரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வரும் 28ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி போலீசார் செல்வேந்திரனை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் விடைத்தாள்களை திருத்த முக்கிய பங்கு வகித்த செல்வேந்திரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளை சிபிசிஐடி போலீசார் செய்து வருகின்றனர். இதற்கிடையே குரூப்4 தேர்வில் வெற்றி பெற இடைத்தரகர் ஜெயகுமாரிடம் ரூ.12 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரபாகரன்(25) என்பவர் நேற்று சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது நீதிபதி நாகராஜன் 15 நாள் நீதிமன்ற காவலில் வரும் 28ம் தேதி வரை பிரபாகரனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி போலீசார் பிரபாகரனை சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,group ,selection scam teacher ,court ,abuse teacher ,Court 4 , 2 people, 4 selection abuse,teacher in court
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.