×

சைதை அரசு மருத்துவமனையில் 8 மாடி கட்டிடம் கட்ட 40 கோடி ஒதுக்க கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பட்டாபிராமை சேர்ந்த ஆர்.விஸ்வநாதன் என்ற எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
  சென்னை சைதாபேட்டையில் கடந்த 1920ல் அரசு மருத்துவமனை தொடங்கப்பட்டது. பின்னர், இந்த மருத்துவமனை 24 மணிநேர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள்.  
ஆனால், 1970ம் ஆண்டில் எத்தனை பணியாளர்கள் இந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டனரோ அதே எண்ணிக்கையிலான பணியாளர்களும், மருத்துவர்களும் மட்டுமே இப்போதும் பணிபுரிந்து வருகின்றனர்.  இதேபோல், மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகளும் இல்லை.

 தற்போது, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த மருத்துவமனையில் பணியாளர்களை அரசு அதிகரிக்கவில்லை. இந்த மருத்துவமனை முதலில் ஸ்டான்லி மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ நிர்வாகத்தின்கீழ் மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தும் வகையில் மருத்துவமனைக்கு புதிதாக 8 அடுக்குகள் கொண்ட 26,921 சதுர அடி கட்டிடத்தை 40 கோடியில் கட்ட கடந்த 2017ல் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கான தொகையை இதுவரை அரசு ஒதுக்கவில்லை. எனவே, இந்த மருத்துவமனைக்கு கட்டிடம் கட்ட ஒதுக்கப்பட்ட ₹40 கோடியை ஒதுக்குமாறும், மருத்துவமனையை சென்னை மாவட்ட சுகாதார துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றுமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் எம்.ஜி.ஆர்.விஸ்வநாதன் ஆஜராகி வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Tags : High Court ,government ,building ,Tamil Nadu ,Saidai ,government hospital , Saidai Government Hospital, Government of Tamil Nadu, High Court, Notices
× RELATED சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 5 மாடி...