×

சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்ததால் மாநகராட்சியின் வருவாய் குறைய வாய்ப்பு: பற்றாக்குறையை ஈடுகட்ட பாக்கிகளை வசூலிக்க திட்டம்

சென்னை: புதிய சொத்து வரி உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதால் ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட பழைய பாக்கிகளை வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 2018ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. புதிய சொத்து வரியானது தாங்கள் செலுத்தி வரும் பழைய சொத்து வரியை விட அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் முறையாக கணக்கீடு செய்யாமல் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி தொடர்ந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட சொத்து வரியை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

இதைத்தவிர்த்து சொத்து வரி தொடர்பான குறைகளுக்கு தீர்வுகாண சென்னை மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் 23 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சொத்து உயர்வு தொடர்பாக மறு ஆய்வு செய்ய குழு 4 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த நவம்பவர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. மேலும் இந்த குழு அறிக்கை அளிக்கும் வரை பழைய சொத்து வரியை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி சென்னை மாநகராட்சியில் புதிய சொத்து வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதால் சென்னை மாநகராட்சிக்கு இந்த நிதியாண்டில் சொத்து வரி வருவாய் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஈடுகட்ட பழைய வரி பாக்கிகளை வசூலிக்கும் பணியை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் சொத்து வரியாகும். மாநகராட்சி ஊழியர்களுக்கான ஊதியம் சொத்துரியை வசூல் மூலம் தான் அளிக்கப்படுகிறது. புதிய சொத்து வரி உயர்வை தொடர்ந்து 2019 - 20ம் நிதியாண்டில் ₹1350 கோடி சொத்து வரி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் அரையாண்டில் 602 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டது. இரண்டாவது நிதியாண்டில் சொத்து வரி உயர்வு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதால் வரி வசூல் குறையத் தொடங்கியது. ஜனவரி மாதம் வரை ₹800 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

எனவே சொத்து வரி பற்றாக்குறையை ஈடுகட்ட பழைய வரி பாக்கிளை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பாக்கி வைத்துள்ள கோடிக்கணக்கான தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுவருகிறது. நோட்டீஸ் அளித்த பிறகும் வரியை செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

300 கோடி வரி பாக்கி
சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் 300 கோடி ெசாத்துவரி பாக்கி வைத்துள்ளன. இதில் 100க்கு மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் மட்டும் 125 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சொத்து வரி வசூல் விவரம்
ஆண்டு    எதிர்பார்ப்பு    வசூல்
2019-20    1350                       800 (ஜன.வரை)
2018-19    1200 கோடி    1000 கோடி
2017-18    800 கோடி    750 கோடி
2016-17    650 கோடி    650 கோடி



Tags : Withdrawal ,corporation , Property tax hike, corporation, deficit, plan to collect the dues
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு