×

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: தேசிய கமிஷனர் பேட்டி

சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கமிஷனர் கூறினார்.  தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டம், மருத்துவம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு தேசிய கமிஷனர் ஜெகதீஷ் ஹர்மேனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள்,  526 ஊராட்சிகளில் தூய்மை பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அவர்களுக்கு போதுமான அளவு மருத்துவ வசதிகள், மருத்துவ காப்பீடுகள் மற்றும் அவர்கள் பணியில் ஈடுபடுவதற்கு தேவையான கையுறைகள், காலுறைகள், முகமூடிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா, முறையான ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது தொடர்பாக கேட்டறிந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: துப்புரவு பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி யாராவது இறந்து போனால் நகராட்சியோ, பேரூராட்சியோ அல்லது ஊராட்சியானால் அங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி ஒரு இறப்பு ஏதும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை அரசின் உரிய அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பணிகளில் ஈடுபடுத்தும்  தனியார் நிறுவனங்கள் மீது போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : death ,National Commissioner Action ,National Commission , Sewer tank, poison gas, worker, national commissioner
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...