×

தாலுகா மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி கோரி வழக்கு: சுகாதாரத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம், அதலையைச் சேர்ந்த புஷ்பவனம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் டயாலிசிஸ் செய்கின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும் என்பதால், டயாலிசிஸ் முறையையே அதிகமானோர் பின்பற்றுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரத்தை கையாளும் உரிய கல்வித்தகுதியை பெற்றுள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் 5 பேர் மட்டுமே உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிகிறது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்களும், பயிற்சி மாணவர்களுமே டயாலிசிஸ் இயந்திரங்களை கையாளுகின்றனர்.

இதனால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட வைரஸ் தொற்று நோய் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் இயந்திரங்களை பொருத்தவும், இவற்றை கையாள போதுமான டயாலிசிஸ் தொழில்நுட்ப பணியிடத்தை உருவாக்கி, தகுதியுடைவர்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர், சுகாதாரத்துறை செயலர், பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.


Tags : dialysis facility ,hospitals ,Health department ,Taluk , Taluk Hospital, Dialysis Facility, Case, Health Department, Respondent, Directive
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...