×

மண்புழு, தேள் மூலம் மருத்துவ சிகிச்சைக்கான ஆராய்ச்சி: நெல்லை பல்கலையில் டைனோசர் காலத்து உயிரின படிமங்கள் சேகரிப்பு

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிர் தொழில்நுட்ப பிரிவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அரியலூர் பகுதிகளில் வாழ்ந்த உயிரினங்களில் படிமங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் தேள் விஷம் மற்றும் மண்புழு மூலம் மருத்துவ சிகிச்சைக்கான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர் தொழில்நுட்பவியல் (பயோ டெக்னாலஜி) துறை சார்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு உள் மற்றும் வெளிமாநில மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக மண்புழு மற்றும் தேள் மூலம் மருத்துவ பயன்பாட்டிற்கான ஆராய்ச்சி வியக்கவைக்கும் வகையில் உள்ளது. தேள் விஷம் மனிதர்களுக்கு கொடியது. ஆனால் இந்த விஷத்தில் மருத்துவத்தன்மை உள்ளதை அறிந்து அதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இங்கு 500க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கொடிய விஷ தேள்களை திறந்த நிலையில் உள்ள பிளாஸ்டிக் பெட்டிகளில் வைத்து வளர்க்கின்றனர்.

ஒவ்வொரு பெட்டியிலும் தண்ணீர் நனைக்கப்பட்டு ஸ்பாஞ்ச் மற்றும் கரையான்புற்று ஆகியவை உணவாக உள்ளே போடப்படுகின்றன. இதற்காக தனியாக கரையான் வளர்க்கப்படுகிறது. இதுகுறித்து இத்துறை பேராசிரியர் சுதாகர் கூறுகையில், மூளை புற்றுநோய் ஏற்படுபவர்களுக்கு அதிக மருந்து உள்ளது. அதை மூளைக்கு எடுத்துச் செல்ல தேள் விஷம் சிறந்த உதவியை தருகிறது. இதற்கான ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் நெல்லை டவுனை சேர்ந்த  துரை, சிவா ஆகியோர் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மண்புழு பல்வேறு ஆற்றல் படைத்தது. கிட்டத்தட்ட 22 ஆயிரம் மண்புழுவின் மரபணுவை இங்கு ஆராய்ச்சி செய்கிறோம். இது விவசாயத்திற்கு மட்டும் பயன்படும் என நினைக்கிறோம். இதன் ஆற்றல் அபரிமிதமானது. இதன் தலைப்பகுதி சிதைந்து விட்டால் மறுபடியும் வளரும் தன்மையுடையது. இதேபோல் விஷத்தன்மை உள்ள பொருளை மண்புழு உண்டால் அதை மெல்ல மெல்ல வால் பகுதிக்கு கொண்டு வந்து வால்பகுதியை பல்லி போல் தானாக துண்டித்துக் கொள்ளும்.

இதன் மூலம் மனிதர்கள் உண்ணும் உணவில் விஷத்தன்மை இருக்கிறதா என்பதை மண் புழு மூலம் ஆராய்ச்சி செய்து கண்டறிய முடியும்.
மண்புழுவில் ஸ்ெடம் செல் உள்ளது. கதிர்வீச்சு உள்ள பகுதியில் மண்புழு தனது விந்தணுவை தானாக உருமாற்றுகிறது. இதனால் ஊனமான வாரிசு வருவது தடுக்கப்படுகிறது. இதைக்கொண்டு மனிதர்களின் மூளை வளர்ச்சிக்கு பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் செயல்பாட்டில் உள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே ஒரு ஆராய்ச்சி புத்தகம் வெளியிட்டுள்ளோம். இதுகுறித்த தொடர் ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்காலத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும் வாய்ப்பு ஏற்படும். குறிப்பாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு உதவ முடியுமா என ஆராயப்படுகிறது.
இந்ததுறையின் மற்ெறாறு முக்கிய ஆராய்ச்சியில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டைனோசர் காலத்து உயிரினங்களின் படிமங்கள் அதிக அளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.

அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த ஆராய்ச்சியில், பல்வேறு நீர் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் கடல் வளம் போன்ற நீர் நிலைகள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆமை, தாடையுடன் பற்கள் உடைய அபூர்வ உயிரினம், சிறியது முதல் பெரிய அளவிலான நத்தை போன்றவைகள் உறைந்து கல் போல் மாறியுள்ளன. மேலும் பல படிம பாறைகளை எடுத்து வந்து அதனை செதில்கள் போல் வெட்டி மேற்கொண்ட ஆராய்ச்சியில் உள்பகுதியில் தாவரங்கள் படர்ந்துள்ள ஆதாரங்களும் கிடைத்துள்ளன. பெரிய அளவிலான மீன்களின் பற்கள் பல கிடைத்துள்ளன. இதுபோன்ற எண்ணற்ற படிமங்கள் எடுத்துவரப்பட்டு இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இவற்றை வைத்து விரைவில் மியூசியம் அமைக்கும் திட்டம் உள்ளது என்றார்.

Tags : rice paddy field , Earthworm, Scorpion, Medical Treatment, Research, Rice University, Dinosaur, Organisms
× RELATED லால்குடி பகுதியில் அறுவடை நேரத்தில்...