×

ஆர்.எஸ்.எஸ் குறித்து பத்தாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்று உண்மையை ஏன் நீக்க வேண்டும்..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்ததுஎன பத்தாம் வகுப்பு பாடத்தில் குறிப்பிட்டுள்ள வரலாற்று உண்மையை ஏன் நீக்க வேண்டும் என்றும் பாட புத்தகங்களில் இருந்து அந்த பகுதியை நீக்க என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மார்ச் 19ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

வழக்கின் பின்னணி

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்து மகா சபா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.பாட புத்தகத்தில் இருந்து இந்த வாசகங்களை நீக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சந்திர சேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆதிகேசவலு, மேற்கொண்டு அச்சடிக்கப்படும் புத்தகங்களில் இந்த வாசகங்கள் நீக்க வேண்டும் என்றும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் இந்த வாசகங்கள் மறைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து தமிழக அரசு, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

இதையடுத்து தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும் ஆர்.எஸ்.எஸ் குறித்த வரலாற்று வாசகங்களை பாட புத்தகத்தில் இருந்து நீக்க தடை கோரியும் தந்தை பெரியார் திராவிட கழக துணை தலைவர் துரைச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது பல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களான கோட்சே, சாவர்க்கர் போன்றவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்பது வரலாற்று உண்மை, ஆகவே ஆர்.எஸ்.எஸ் குறித்து பாடப்புத்தக்த்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கூடாது என மனுதாரர் துரைசாமி  தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு, தற்போது நம்முடன் நட்புறவு கொண்டுள்ள சீனா இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது போன்ற வரலாற்று உண்மைகளை எப்படி மறைக்க முடியாதோ, அதேபோல தான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ். எடுத்ததையும் மறைக்க முடியாது என கருத்து தெரிவித்தனர்.மேலும், இது போன்ற வரலாற்று தகவல்களை பாட புத்தகங்களில் இருந்து நீக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக மார்ச் 19ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : HC ,government ,Tamil Nadu ,RSS , Historical Truth, Government of Tamil Nadu, High Court, Question, Islam, RSS, Gotze, Savarkar
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...