×

வேளாண் மண்டலம் என்றார் எடப்பாடி: புதிதாக எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி முயற்சி...விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என சேலத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விழாவில்  முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தநிலையில், அது ஒரு நாள்கூட நீடிக்காமல்  மீண்டும்  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:திருவாரூர் அருகே அலிவலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில்  விவசாயிகள் நடராஜன் மற்றும் அமிர்தகவி ஆகியோரது விவசாய நிலத்தில், கச்சா  எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது.

 ஏற்கனவே 2 எண்ணெய் கிணறுகள் இயங்கி வரும் நிலையில், மூன்றாவதாக நேற்று அந்த இடத்தில் புதிதாக ஒரு  எண்ணெய் கிணறு அமைப்பதற்காக  இடத்தினை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதை கண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால் இந்த எதிர்ப்பை  கண்டுகொள்ளாத ஓஎன்ஜிசி நிறுவனமோ தனது பணியினை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் இதனை மாவட்ட நிர்வாகம்  உடனடியாக தடுக்க வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயி அமிர்தகவி கூறுகையில், அலிவலம் பகுதியில் முதன்முதலாக மண்ணெண்ணெய் எடுக்க போவதாக ஓஎன்ஜிசி நிறுவனத்தினர்   தெரிவித்ததன் பேரில் விவசாய நிலங்கள் வழங்கப்பட்டன.

 ஆனால் முதலில் மூன்று வருட காலத்திற்கு மட்டுமே தேவை என்று தெரிவித்த நிலையில், அதன்  பின்னர் 20 ஆண்டு காலம் ஆகியும் நிலத்தை விடுவதற்கு  மறுத்து வருகின்றனர். இது மட்டுமன்றி மண்ணெண்ணெய் எடுப்பதாக தெரிவித்துவிட்டு தொடர்ந்து  கச்சாஎண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதுடன்  மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் ஏற்கனவே இங்கு 2 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள  நிலையில் மூன்றாவதாக ஒரு கிணறையும் தற்போது துவங்க உள்ளனர். எனவே பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வர்  அறிவித்துள்ள நிலையில் அதற்கேற்ப மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து புதிய கிணறுகள்  அமைக்கும் பணியினை தடுக்க வேண்டும் என்றார்.

Tags : oil well ,ONGC ,Edappadi ,Agriculture Zone , Agriculture Zone said Edappadi: ONGC to set up new oil well ... Farmers protest
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்