×

அணைகள் பாதுகாப்பு, பராமரிப்பது எப்படி? தமிழக அதிகாரிகளுக்கு சுவிட்சர்லாந்து நிபுணர்கள் பயிற்சி

சென்னை: தமிழகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை செயற்பொறியாளர் தலைமையிலான  பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.   நீர் மேலாண்மையில் போதிய அனுபவம் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. குறிப்பாக, குடிநீர் தினசரி திறக்க வேண்டிய நீரின் விநியோக அளவு,  பாசனத்துக்கு தேவையான நீர் விநியோகம் தொடர்பாக வரைவு அறிக்கை தயாரிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு அணைகளில் கூடுதல் நீரை சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் இயக்ககத்தை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது.

இது தொடர்பாக, பொறியாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு சுவிட்சர்லாந்து நாட்டின் நீர்வளப்பிரிவு நிபுணர்கள் எல்மார் ஜோசீப், ஜீன் மரீ பியரோஷ், பாட்டீரிக் மெட்ரீயலர் ஆகியோர் பயிற்சி  அளித்தனர். இதில் பொதுப்பணித்துறை, மின்வாரியம், வேளாண்மை துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக பின்பற்றி வரும் நடைமுறைகள் குறித்து  விளக்கம் அளித்தனர். மேலும், அவசர கால கட்டங்களில் அணைகளில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாது என்ன என்பது குறித்தும், அணைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பயிற்சி அளித்தனர். தொடர்ந்து  சுவிட்சர்லாந்து நீர்வளப்பிரிவு நிபுணர்கள், மற்றும் தமிழக பொறியாளர்கள் ஆகியோர் கிருஷ்ணகிரி அணைக்கு நேரில் செல்கின்றனர். அங்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் நேரில் விளக்கம் அளிக்கின்றனர். தொடர்ந்து அதே  போன்று மற்ற அணைகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : experts ,Tamil Nadu ,Switzerland ,Swiss , Dams Protection, Maintenance, Tamil Nadu Authorities, Switzerland
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...