டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு விடைத்தாள்களை மாற்றிய டிரைவர்கள் உள்பட 5 பேர் கைது: சென்னை, திருவள்ளூர், நாகர்கோவிலை சேர்ந்தவர்கள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில், விடைத்தாள்களை மாற்றிய டிரைவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் முக்கிய புரோக்கர் ஜெயக்குமாருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.  இவர்களில் சென்னை, திருவள்ளூர் உள்பட பல மாவட்டகங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில்  தேர்வு எழுதியவர்களில் முதல் 100 இடங்களை பிடித்தனர்.  இது குறித்து புகார் எழுந்ததும், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவ்வாறு முறைகேடாக தேர்வு எழுதியது உறுதி செய்யப்பட்டது.

தீவிர விசாரணையில் இதற்கு மூளையாக செயல்பட்டது சிவகங்கையைச் சேர்ந்த எஸ்ஐ சித்தாண்டி, புரோக்கர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சித்தாண்டி, அவரது தம்பி மற்றும்  ஊழியர் ஓம் காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புரோக்கர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் விஜயகுமார்,  மல்லிகா தலைமையில் தனிப்படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குரூப்4 தேர்வில் விடைத்தாள்களில் அழியும் மையால் தேர்வு எழுதி விட்டு,  விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியிலேயே வாகனத்தை நிறுத்தி, விடைகளை மட்டும் எழுதி மீண்டும் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர். இதேபோலத்தான், குரூப் 2 தேர்விலும் நடத்தியதாக தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, விடைத்தாள்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்ட சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த டிரைவர் கார்த்திக்(39), செந்தில்குமார்(36), பெரம்பூர் ஜி.கே.எம்.காலனியைச் சேர்ந்த மெக்கானிக் மற்றும்  டிரைவராக உள்ள சாபுதீன்(42) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றிய ஓம் காந்தனும், ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இனோவா காரில் விடைத்தாள்களை ஏற்றிச் செல்வோம். எங்கள் காருக்கு  முன்னால் ஓம் காந்தனின் சைலோ கார் செல்லும். வழியில் அதிகாரிகள் சோதனையிடுகிறார்களா? போலீசார் வாகனச் சோதனை செய்கிறார்களா என்பதை முன்னாள் சென்று ஓம் காந்தன் சொல்வார். வழியில் ஓம் காந்தன்  உத்தரவின்படித்தான், கார்களை நிறுத்தி, விடைத்தாள்களை மாற்ற உதவி செய்வோம் என்று தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து ஓம் காந்தன், கார்த்திக் ஆகியோரிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2016ல் நடைபெற்ற  விஏஓ தேர்வில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மையத்தில் தேர்வு எழுதியவர்களின் முறைகேடு குறித்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் முறைகேடாக தேர்வு எழுதி பணியில் சேர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவரும் தற்போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் படலையார் குளம் விஏஓவாக பணியாற்றும் பன்னீர்செல்வம்(29),  சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவரும், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா பனையஞ்சேரி விஏஓ செந்தில்ராஜ்(எ)கபிலன்(36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர்  ஜெயக்குமாரிடம் ₹7 லட்சம் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்குகளில் இதுவரை குரூப்2ஏ தேர்வு விவகாரத்தில் சிக்கிய 19 பேர், குரூப்4 தேர்வில் சிக்கிய  16 பேர் என மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: