×

1,000 கோடி திரட்ட செயில் நிறுவனத்தில் 5% பங்கு விற்பனை

புதுடெல்லி: செயில் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை விற்று 1,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், செயில் நிறுவனத்தில் உள்ள அரசு பங்குகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலத்தில் செயில் நிறுவனம் இயங்குகிறது. பங்கு விற்பனை தொடர்பாக, முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை நிறுவனம் மற்றும் ஸ்டீல் அமைச்சகங்களின் வட்டாரத்தில் கூறியதாவது: செயில் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் உள்ளன. இதில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தற்போதைய சந்தை விலையின்படி கணக்கிட்டால், மத்திய அரசுக்கு 1,000 கோடி கிடைக்கும்.

கடந்த வாரம் முடிவடைந்த பங்குச்சந்தை நிலவரங்களின்படி, செயில் நிறுவன பங்கு ஒன்றின் மதிப்பு 48.65 ஆக உள்ளது. இந்த பங்கு விற்பனையை நடப்பு மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதை சாத்தியமாக்கும் வகையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இதுபற்றி பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஹாங்காங்கில் பங்கு விற்பனை பிரசாரம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த 2014 டிசம்பரில் செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.  நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் மத்திய அரசு 65,000 கோடி திரட்ட முடிவு செய்தது. இதில் 34,000 கோடி திரட்டப்பட்டு  விட்டது. எஞ்சிய 31,000 கோடி மார்ச் இறுதிக்குள் முடிவடையும் என  எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : share sale , 1,000 crores, 5% share sale in SAIL
× RELATED பெல் உட்பட 6 பொதுத்துறை நிறுவனங்கள்...