×

குரூப்-2, ஜூனியர் ஆர்கிடெக் தேர்வுகளில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப்-2, ஜூனியர் ஆர்கிடெக் தேர்வுகளில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்வாணையம் அண்மையில் முடிவுகள் வெளியிட்ட குரூப்-2 தேர்வில், 1997ம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்துக்குரியதாக உள்ளது என்று சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஐயங்கள் தொடர்பாக தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்வாணையம் அறிவித்துள்ளது போன்று அடுத்த வாரம் குரூப்-2க்கான கலந்தாய்வு நிறைவு பெற்று தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்ற உடன் தேர்வர்களின் முழு விபரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதுபோலவே அண்மையில் நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான தேர்வில் இளநிலை கட்டடக் கலைஞர்( ஜூனியர் ஆர்கிடெக்) பணிக்கான நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்ட 39 தெரிவர்களில் சென்னை மையத்திலிருந்து மட்டும் 31 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எனவே இதில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஐயங்கள் தொடர்பாகவும் தேர்வாணையம் முழுவதுமாக ஆய்வு செய்துள்ளது. மேற்குறிப்பிட்ட 31 தேர்வர்களும் மூன்று வெவ்வேறு தேர்வுக்கூடங்களில் 21 வெவ்வேறு அறைகளில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வு தொடர்பான அனைத்து ஆவணங்களும் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் தவறு ஏதும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான கலந்தாய்வு இன்று(நேற்று) நிறைவுற்ற நிலையில் தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் முடிவுற்ற உடன் தேர்வர்களின் முழு விபரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் இதுபோன்ற ஊகங்களின் அடிப்படையிலான செய்திகளால் நல்ல முறையில் தேர்விற்கு தங்களை தயார் செய்து தேர்வில் நேர்மையாக பங்கேற்கும் தேர்வர்களின் திறமையை குறைத்து கூறுவது வருத்தத்துக்குரியது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DNBSC ,Group-2 ,announcement , Group-2, Junior Architect Exam, DNBSC
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...