×

இது காதலர் தின ஸ்பெஷல் : காதல் தற்கொலையில் தமிழகமும் ; காதல் கொலையில் ஆந்திராவும் முதலிடம்...

விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலக்கும் ஒரு இனிய மந்திரம் காதல். கல்லை கனியாக்கி... முள்ளை மலராக்கும்... சக்தி காதலுக்கு உண்டு என்பது நிதர்சனம். காதலில் கரம் சேர்க்கும் இதயங்களுக்கு இனிய இல்லறமும், சமூகம் போற்றும் நல்லறமும் இலக்கானால் நிச்சயம் இது சாத்தியம். இளமை பக்கங்களில் இதுவும் ஒரு அத்தியாயம் என்பது  நினைப்பானால் கனியும் கல்லாகும்... மலரும் முள்ளாகும்...என்பதும் சத்தியம்.  

பிப்ரவரி 14 - இது இளவட்டங்கள் சிறகு முளைத்து விண்ணில் வட்டமடிக்க,  யுவதிகள் ஏஞ்சல்களாய் வலம் வரும் ஒருநாள். இதற்கு பெயர் ‘காதலர் தினம்’ என்னும் திருநாள். இந்த வகையில் இன்னும் சில நாட்களில் இந்த பூமி பந்து, காதலர் தின கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகிறது. ஆனால் இந்த கொண்டாட்டங்கள், உண்மையில் காதலை உயிர்ப்பிக்கிறதா அல்லது அதன் உணர்வுகளை சிதைக்கிறதா என்ற கேள்வியும் இங்கே இயல்பாகி விட்டது. காதல் என்பது குடும்பத்தை ஒன்று சேர்க்கவும் செய்யும், குடும்பத்தை  மாய்க்கவும் செய்யும். எல்லோர் மனநிலையும், குடும்ப சூழலும், சமூக சூழலும்  ஒன்றாக இருப்பதில்லை என்பதையே அது காட்டுகிறது. காதலில் ஏற்படும்  வெற்றி, தோல்வியே ஒருவரின் வாழ்வை தீர்மானிக்கிறது என்றால், அது நிச்சயம்  இல்லை. இருந்தாலும், உண்மையான அளவு கடந்த அன்பால் பிணைக்கப்பட்ட காதல் ஜோடி  பிரியும்போது, தற்கொலை என்னும் அரக்கன் வாழ்க்கைக்குள்  எட்டிப்பார்க்கிறான். நாடு முழுவதும்  காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது. அதுவும்  படிப்பறிவு அதிகம் கொண்ட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,  ஆந்திரா மாநிலங்களில் காதலில் தோல்வியுறும் இளசுகள், தற்கொலை செய்து  கொள்கின்றனர். காதல் தற்கொலையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

காதலை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர், உரிய வயதில்  இருவரையும் சேர்த்து வைக்கின்றனர். காதலை ஏற்காத பெற்றோர், அதனால் நம்  வாழ்வு சிறக்காது எனக்கூறி பிள்ளைகளுக்கு புரிய வைக்கின்றனர். பெற்றோரின் இந்த எதிர்ப்பு இளைஞர்களுக்கு வேப்பங்காயாக கசக்கும். அப்போதுதான் பெற்றோரை எதிர்த்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்கிறோம் என தனிப்பாதை அமைத்துக்கொள்கின்றனர். இதில் சிலர் வெற்றி பெறுகிறார்கள், சிலர் தோல்வியடைந்து வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள்.  சாதி,  மதம் பார்க்காத காதல் காலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டுமானால்,  அக்காதலில் ஒன்றிணைந்தவர்கள் தங்கள் வாழ்வை சிறப்பாக அமைப்பதில் இருந்து மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்கவேண்டும். அதுவே காதலித்து திருமணம் செய்து கொண்டபின், வாழ்க்கை இழந்து  இருவரும் தவிப்பிற்கு உள்ளானால், அது பிறருக்கு எச்சரிக்கை மணியாகவே  பார்க்கப்படும். இதுவே இன்றைய எதார்த்தம். இதனை புரிந்து கொண்டு இளசுகள்  காதலிக்க வேண்டும்... காதலை வாழ வைக்க வேண்டும்... இருவரின் பெற்றோர்  சம்மதத்துடனும், அவர்கள் ஒத்துழைப்புடனும் திருமணத்தில் ஒன்று கூட முன் வர  வேண்டும்.... இவை தான், காதலுக்கான உண்மையான வெற்றியாக அமையும்.

விபரீதத்திற்கு வித்திடும் பள்ளிப் பருவ காதல்


தற்போது, பள்ளி பருவத்திலேயே காதல் என்பதை ஒரு பொழுதுபோக்காக செய்து வருகிறார்கள். அதிலும் முக்கியமாக தற்போது 10ம்  வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் முதல் காதலிக்கிறோம் எனக்கூறிக்கொண்டு அலைகின்றனர். இவர்கள் 12ம் வகுப்பு அல்லது  கல்லூரி முதலாம் ஆண்டு  படித்துக்கொண்டிருக்கும் போதே ஓட்டம் பிடித்து  விடுகின்றனர். இப்படி பெற்றோர் புகாரின் பேரில், போலீசார்  தேடிப்பிடிக்கும் பலர், திருமண வயதை எட்டாதவர்களாகவே உள்ளனர். இதில்  பெண்ணிற்கு திருமண வயது எட்டாத நிலையில் இருந்தால், அந்த பெண்ணுடன் ஓட்டம்  பிடித்தவருக்கு சிறை தண்டனை நிச்சயம். பெண் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார். இதனால் இருவரின் வாழ்க்கையும்  கேள்விகுறியாக  மாறுகிறது.

இது காதலர் தினத்தின் பெருமை மிகு வரலாறு


ரோமாபுரியில் கிளாடிஸ் மிமி ஆட்சி நடந்த காலகட்டம் அது. தம்நாட்டுப் படைகளில் சேர, இளைஞர்கள் யாருக்கும் ஆர்வமில்லை என்ற சேதி, மன்னனின் காதில் சேருகிறது. ஆத்திரமடைந்த மன்னன், அமைச்சர்களை  அழைத்தான். ‘இந்த நாட்டில் இனிமேல் யாரும் காதலிக்கக் கூடாது. திருமணம்  செய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து  செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என்பது மன்னனின் அதிரடி உத்தரவு. திருமணத்திற்கும், காதலுக்கும் தடைவிதித்தால் அதிகளவில், இளைஞர்கள், படைவீரர்களாக மாறுவார்கள் என்பது மன்னனின் கணிப்பு.

மன்னனின் உத்தரவால் ரோமானியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதே நேரத்தில் பாதிரியார் வாலண்டைன் இந்த அறிவிப்பை மீறி, காதலர்களை இணைத்து ரகசியத் திருமணங்களை நடத்தி வைத்தார். இதையறிந்த மன்னன், வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைத் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்தது. வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். சிறைத் தலைவனோ, மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். பலத்த காவலையும் மீறி, காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வாலண்டைன். கடிதத்தை படித்துக் கொண்டிருந்த நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடித்து,  சித்ரவதை செய்து, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் 14ம் தேதி  நடந்த இச்சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கியது. இப்படி தனது இன்னுயிரை துறந்து, ஒப்பற்ற காவியமாக காதலை வடித்த பாதிரியார் வாலண்டைன் நினைவு நாள் தான், பாரெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ரோமானிய சாம்ராஜ்யத்தில், ரத்தத்துளிகளில் உருவான காதலர் தினத்தின் பெருமைக்குரிய வரலாறு,’’ இது தான்.

ஆண்டுக்கு 600

இந்தியாவில்  நடக்கும் தற்கொலைகளில் காதல் தோல்வியால் உயிரை மாய்ப்பவர்கள் 15 சதவீதம்  பேர் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் காதல் தற்கொலைகள் அதிகம் நடக்கும்  மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பதும் ஆய்வுகளில்  வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல். தமிழகத்தில் ஆண்டுக்கு சாரசரியாக 600 பேர்,  காதல் தோல்வியால் இறக்கின்றனர் என்பதும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டவர்களில், ஆண்களை விட பெண்களே அதிகம்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆணவக் கொலைகள்

காதலுக்காக  அதிகமான கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடத்தை  பிடித்துள்ளது. உத்தரபிரதேசம் 2வது இடத்திலும், மகாராஷ்டிரா 3வது  இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும் உள்ளது. மத்திய பிரதேசம் 5வது இடத்தை  பிடித்துள்ளது. இந்த மாநிலங்களில் பெரும்பாலும் சாதி ஆணவக் கொலைகளே அதிகம் நடக்கிறது என்பதும் வேதனைக்குரிய ஒன்று.


Tags : Valentine's Day ,Andhra Pradesh , Valentine's Day special
× RELATED NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின்...