×

டி.பி.சத்திரம் பகுதியில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

கீழ்ப்பாக்கம்: டி.பி.சத்திரம் பகுதியில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ் 1 படித்து வருகிறாள். இச்சிறுமிக்கும், அவளது தாய்மாமன் பவித்ரன் (25) என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி, இவர்களது திருமணம், உறவினர்கள் முன்னிலையில், மதுரவாயலில் உள்ள ஒரு கோயிலில் நேற்று காலை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் மாலை நடைபெற்று வந்தது. இதுபற்றி அறிந்த டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார், எஸ்ஐ தில்லைராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார், சிறுமியின் வீட்டுக்கு வந்து, விசாரணை நடத்தினர். அதில், சிறுமிக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவது தெரிந்தது.

பின்னர், சிறுமி மற்றும் அவளது தாய் ஆகியோரை அழைத்து சென்று, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். அப்போது, சிறுமிக்கு திருமணம் செய்யக்கூடாது. அவருக்கு 18 வயது பூர்த்தியான பிறகுதான் திருமணம் நடத்த வேண்டும் என தாயாரிடம் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : area ,DP Chatram , DB Chatram, girl marriage, stop
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு