×

கன்னியாகுமரி - திருவனந்தபுரம், நாகர்கோவில் - மதுரை இரு வழிப்பாதை ரயில் பணிகள் 2022க்குள் முடியுமா?

நாகர்கோவில்: கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையேயான இரட்டை ரயில் பாதைகளுக்கான நில ஆர்ஜித பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 4027.08 கி.மீ தூரத்துக்கு ரயில்வே இருப்புபாதை வழித்தடங்கள் உள்ளது. நாட்டின் தென்கோடி பகுதியான கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை செல்லும் வழிதடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும். இந்த வழி தடம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழி தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் இயங்குகின்றன.

தற்போது சென்னை முதல் மதுரை வரை உள்ள 490 கி.மீ. பாதை இரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி முதல் தஞ்சாவூர் வரை 50 கி.மீ பாதை இரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் சுமார் 4,027 கி.மீ பாதை உள்ள தமிழகத்தில் சுமார் 1,027 கி.மீ பாதை மட்டுமே இரு வழிபாதையாக உள்ளன. மீதமுள்ள சுமார் 3,000 கி.மீ பாதை இன்னமும் ஒரு வழிபாதையாகவே உள்ளது. இதில் சுமார் 350 கி.மீ. தூரத்துக்கு இருவழிபாதை பணி திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையை இருவழிபாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையின் அடிப்படையில் முன்னாள் மத்திய  இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் தீவிர முயற்சியால் இந்த திட்டம் 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கி.மீ பாதையை இருவழிபாதையாக மாற்ற ரூ. 900 கோடி கொண்ட திட்டத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் 132 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது முதல் முன்னுரிமையாக கன்னியாகுமரி - நாகர்கோவில் - இரணியல் பகுதி பணிகள் நடைபெற்று வருகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக கடந்த நான்கு மாதங்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த பட்ஜெட்டில் நிதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் மார்ச் மாதத்தில் பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் நில ஆர்ஜித பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரயில்வே துறையை பொறுத்தவரை நிலங்களுக்கான மதிப்பீடு தொகையை அளித்து விடுவார்கள். மாவட்ட நிர்வாகம் தான் வருவாய்த்துறை மூலம் நிலத்தை ஆர்ஜிதம் செய்து வழங்க வேண்டும். அந்த வகையில் நில ஆர்ஜித பணி இன்னும் மந்த கதியில் தான் உள்ளது. பல்வேறு இடங்களில் அளவீடு கூட வருவாய்த்துறை முடிக்க வில்லை. இதனால் இந்த திட்டம் 2022ம் ஆண்டுக்குள் முடிவடையுமா? என்பத கேள்விக்குறியாக உள்ளது. கன்னியாகுமரி -  திருவனந்தபுரம் வழித்தடத்தில், கன்னியாகுமரி -  நாகர்கோவில் பிரிவில் மட்டும் பணிகள் ஓரளவு சுமாராக நடக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழிபாதையில் ரயில் போக்குவரத்துக்கு வாய்ப்ப இருப்பதாக எதிர்ப்பார்க்கபடுகிறது.

நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இரு வழிபாதையாக மாற்ற மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாக என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. இதில் மதுரை -  மணியாச்சி  - தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ரூ. 1,182.31 கோடி, நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ரூ. 1,003.94 கோடி ஆகும்.
இந்த திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நாகர்கோவில் - மணியாச்சி இருவழிபாதை பணிகளுக்காக ரூ. 345 கோடி, மதுரை  மணியாச்சி - தூத்துக்குடி திட்டத்துக்கு 367 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்த இரண்டு திட்டத்துக்கு சேர்த்து இந்த ஆண்டு மொத்த ஒதுக்கீடு ரூ. 712 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், இந்த திட்டம் தென் மாவட்ட மக்களின் நீண்டகால கனவு திட்டமாகும். இந்த திட்டம் 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு ரயில்வேத்துறை நிதி ஒதுக்கீடு மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கடுமையாக முயற்சியே ஆகும். இந்த திட்டம் செயல் வடிவத்துக்கு வர அவர் தான் முக்கிய காரணம் ஆவார். திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, நாகர்கோவில் - மதுரை இரு வழிப்பாதை பணிகள் முடிவடைந்தால், தென் மாவட்ட மக்களின் நலன் கருதி கூடுதல் ரயிலை இயக்க முடியும். இந்த திட்டத்துக்கான நில ஆர்ஜித பணிகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முடிக்க வேண்டும் என்பது தான் முக்கிய கோரிக்கை ஆகும் என்றார்.

Tags : Kanyakumari - Thiruvananthapuram ,Madurai ,Nagercoil , Train
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை