×

இந்தியாவில் போதைப் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது மத்திய சமூக நலத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதிலுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகள் போதை ஊசிகளை பயன்படுத்துகிறார்கள் என மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை மனதை பதைபதைக்க வைக்கிறது. இந்தியாவில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கண்டறிவதற்காக மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் ஆய்வு ஒன்றினை நடத்தியது. 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 18 முதல் 75 வரை உள்ள பெரியவர்கள் என இரண்டு விதமாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்மூலம் கிடைத்திருக்கும் தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர்ச்சி ரகம். 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள், 30 லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறுகிறது ஆய்வறிக்கை. இது நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1.3 விழுக்காடாகும். பெரியவர்களை பொறுத்தவரையில் 15 கோடியே 10 லட்சம் பேருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாசலப்பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் சரிபாதி ஆண்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறதாம்.  10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேருக்கும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 2 கோடியே 90 லட்சம் பேருக்கும் கஞ்சா பழக்கம் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 40 லட்சம் குழந்தைகளும் 1 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் போதை ஊசி பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் 10 முதல் 17 வயது வரை உள்ள 20 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 1 கோடியே 10 லட்சம் பேரும் போதை மாத்திரைகளை உபயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உறிஞ்சும் வகையிலான போதை பொடிகளை 30 லட்சம் குழந்தைகளும் 60 லட்சம் பெரியவர்களும் பயன்படுத்துவதாக கூறுகிறது. 10 முதல் 17 வயது வரை உள்ள 2 லட்சம் பேரும், 18 முதல் 75 வயதிற்குட்பட்ட 10 லட்சம் பேரும் கொகைன் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும்  வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

Tags : India ,Ministry of Social Welfare , India, Ministry of Drug Abuse, Counting, Research, Central Social Welfare
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்