×

திருவண்ணாமலை வேங்கிக்காலில் ₹3 கோடி மதிப்பில் பல்வேறு அம்சங்களுடன் அறிவியல் பூங்கா

*அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் கலெக்டர் அலுவலகம் அருகே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மாநில நிதிக்குழு, ஊராட்சி ஒன்றிய பொதுநிதி, கனிமங்கள் மற்றும் சுரங்கள் நலநிதி, சமூக பொறுப்பு நிதி ஆகியவற்றின் கீழ் ₹3 கோடி மதிப்பில் புதிய அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த திறப்பு விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார். பூங்காவை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்பம் கொண்ட விளையாட்டு உபகரணங்கள், எந்திர பொறியியல், ஒளி, ஒலி வெப்பம், இயற்பியல், உயிரியல், வான்வெளியியல் சம்பந்தமான அறிவியல் மாதிரி உபகரணங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் எங்கும் இந்த மாதிரியான அறிவியல் பூங்கா அமைக்கப்படவில்லை.  இந்த பூங்கா அமைவதற்கு காரணமாக இருந்த அமைச்சர், கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் கல்வி முறையில் மட்டுமில்லாது விளையாட்டு முறையில் அறிவியல் சம்பந்தமான நுணக்கமான விவரங்களை அறிந்து கொள்ள இந்த அறிவியல் பூங்கா பெரிதும் உதவியாக இருக்கும்’’ என்றார்.

தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி, மாணவிகளின் வீணை இசை நிகழ்ச்சி, கோலாட்டம், விழிப்புணர்வு நடனம் ஆகியவற்றை பார்வையிட்டார்.பூங்காவில் பல்வேறு அறிவியல் மாதிரி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரைவட்ட திறந்தவெளி அரங்கத்தில் அறிவியல் சம்மந்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கருத்து பட்டறைகள், பேச்சுப்போட்டி, இதர கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் நடைமேடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

 நிகழ்ச்சியில், எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட பால் உற்பத்தியாளார்கள் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, ஆர்டிஓ தேவி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Science Park ,Thiruvannamalai Vengikal ,tiruvannamalai , Science park, Tiruvannamalai, annamalaiyar Temple, park
× RELATED மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார்...