×

டிஎன்பிஎஸ்சி தேர்வு மோசடி மன்னன் ஜெயகுமார் கோர்ட்டில் சரண்

* 1000 பேரை முறைகேடாக தே ர்ச்சி பெற வைத்தது அம்பலம்
* விஏஓ தேர்விலும் மெகா மோசடி கண்டுபிடிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் இனி தப்பிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் தலைமறைவாக இருந்த மோசடி மன்னன் ஜெயகுமார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றதில் சரணடைந்தார். இதற்கிடையில் சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 8 ஆண்டுகளாக விஏஓ தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு பணம் பெற்று 1000 பேர் வரை தேர்ச்சி பெற வைத்து தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் பகீர் தகவலை சிபிசிஐடியிடம் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து வெற்றி பெற்றது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின்படி சிபிசிஐடி போலீசார் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சித்தாண்டி உட்பட 32 பேரை நேற்று முன்தினம் வரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே ஓம் காந்தன் மற்றும் சித்தாண்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அப்போது சித்தாண்டி மற்றும் ஓம் காந்தன் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக மோசடி மன்னனான ஜெயகுமாருடன் இணைந்து சினிமாவை மிஞ்சும் அளவுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே புதியதாக ஒரு முறைகேடு அம்பலத்துக்கு வந்துள்ளது. அதாவது கடந்த 2016ம் ஆண்டு, சித்தாண்டி, ஓம் காந்தன், ஜெயகுமார் கூட்டணி ஒரு விஏஓ பதவிக்கு 12 லட்சம் வீதம் 10 பேரிடம் 1.20 கோடி பணம்  வசூலித்து மோசடியாக விஏஓ தேர்வில் வெற்றி பெற வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன்(எ) சக்தி 12 லட்சம் பணம் கொடுத்து தான் தற்போது விஏஓவாக பணியாற்றி வருகிறார்.  அதைதொடர்ந்து மோசடியாக விஏஓ தேர்வு எழுதி வெற்றி பெற்ற நாராயணனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் பால்டெக்னிக் தேர்வு முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என மொத்தம் கடந்த 8 ஆண்டுகளில் சித்தாண்டி, ஓம் காந்தன், ஜெயகுமார் கூட்டணி  மெகா மோசடியாக 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது 41 அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை தகுதி நீக்குவது குறித்து அரசு அதிகாரிகள் துறை வாரியாக தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மெகா மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஜெயகுமாரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பல கோணங்களில் தேடி வந்தனர்.நாளுக்கு நாள் இடைத்தரகரான ஜெயகுமாரின் மோசடிகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வந்ததால் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார் வேறு வழியின்றி தனது வழக்கறிஞர் மூலம் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 23வது மாஜிஸ்திரேட் கவுதமன் முன்னிலையில் சரணடைந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

பின்னர் மாஜிஸ்திரேட் கவுதமன், சரணடைந்த ஜெயகுமாரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற காவல் முடிந்த உடன் டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்குகள் நடந்து வரும் நீதிமன்றத்தில் ஜெயகுமாரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சரணடைந்த ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் நேற்று புழல் சிறையில் அடைத்தனர். இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரை ஆஜர்படுத்தும் போது, 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளையும் தற்போது சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பல நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமார் சிக்கியுள்ளதால் விரைவில் டிஎன்பிஎஸ்சி மோசடிகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Charan ,court ,TNPSC ,DNPSC ,fraud jayakumar , Charan in court , TNPSC fraud jayakumar
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...