×

கடைகள், வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றம்: ஆக்கிரமிப்புகளால் சுருங்கிய வேலூர்-ஆற்காடு சாலை...தினமும் நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்

வேலூர்: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் வேலூர் மாநகர் முதலிடத்தில் உள்ளது. கல்வி, தொழில், மருத்துவம், சுற்றுலா,  வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வேலூர் வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களின்  எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 50 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. அதேபோல் ஆட்டோக்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வேலூர்-ஆற்காடு சாலை நெரிசல் சாலையாகவே மாறிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர்-ஆற்காடு சாலை இருவழிச்சாலையாக  பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது வேலூரில் இருந்து செல்லும் பஸ்கள் மட்டுமே அவ்வழியாக இயக்கப்படுகிறது.

 (கார், ஆட்டோ, பைக்குகள் வழக்கம்போல்  இருவழிச்சாலையாக பயன்படுத்தி வருகிறது) ஆற்காடு, வாலாஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் பழைய பஸ்நிலையம் வரும் பஸ்கள்  சென்னை-பெங்களூரு சர்வீஸ் சாலை வழியாக செல்கிறது. இப்படி இருந்தும் இந்த சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு காரணம் சாலையின் இருபுறங்களிலும் கடைக்காரர்கள் 5 அடி வரையில் ஆக்கிரமித்துள்ளனர். அதோடு மற்றொரு 5 அடியில் கடைகளுக்கான போர்டு,  விற்பனை பொருட்கள் என்று வைத்து 60 அடியாக இருந்த சாலையை ஆக்கிரமித்து 30 அடியாக சுருக்கியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி  சார்பில் சிஎம்சி மருத்துவமனை எதிரே உள்ள கடைகளில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் அதனை முழுமையாக அகற்றவில்லை.

இதனால்  மீண்டும் வேலூர்-ஆற்காடு சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டது. அதோடு சிஎம்சி மருத்துவமனை தொடங்கி, காகிதப்பட்டறை உழவர் சந்தை  வரையில் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகளும் முளைத்துவிட்டது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் வாகனங்கள்  ஆங்காங்கே பார்க்கிங் போல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தாறுமாறாக வாகனங்களை ஓட்டிச்செல்வதும் ஆங்காங்கே திடீர் திடீரென வாகனங்ளை  சாலையின் குறுக்கே திருப்புவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை,  காவல்துறையினர் கண்டும் காணாமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் வேலூர்-ஆற்காடு சாலை தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால், ஆற்காடு சாலையை கடப்பதற்கு  மிகவும் கடினமாக உள்ளது. எனவே மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை ஆகிய 3 துறை அதிகாரிகள் இனியாவது வேலூர்-ஆற்காடு சாலையில்  உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வாகனங்கள் விதிமுறைப்படி செல்லவும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : shops ,road ,Vellore-Arcadu , Conversion of shops and vehicles: Vellore-Arcadu road, which is jammed with occupations ...
× RELATED பிளாஸ்டிக் விற்ற 15 கடைகளுக்கு அபராதம்