×

தினக்கூலி பணியாளர்களுக்கு பணிவரன்முறை செய்யப்பட்டும் மறுஒதுக்கீடு ஆணை வழங்காமல் இழுத்தடிப்பு

* அறிக்கை அனுப்பாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்
* முதன்மை தலைமை பொறியாளர் அவசர கடிதம்

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் பணிவரன்முறை செய்யப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு மறுஒதுக்கீடு ஆணை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.  தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த தினக்கூலி ஊழியர்களில் 3,407 பேரை தமிழக அரசு புதிய ஊதியம் வரன்முறை செய்தது. தமிழக அரசு நியமித்த ஸ்கிரீனிங் கமிட்டி ஆய்வு செய்து இவர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் இடம்பெற்ற ஊழியர்கள் உடனடியாக அந்தந்த கோட்டங்களில் நியமன ஆணையை பெற்றுக்கொண்டு பணியில் சேருமாறு அறிவுரை வழங்கியது. ஆனால், கோட்ட அதிகாரிகள் நியமனம் செய்யவிடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து முதன்மை தலைமை பொறியாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த டிசம்பரில் ஆய்வுக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு உரிய அலுவலகங்கள்/கோட்ட/உபகோட்ட அலுவலகங்களில் உள்ள மறு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்ட விவரங்களை உடனடியாக இந்த அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது வரை தங்களது மண்டலம்/அலுவலகங்களின் வாயிலாக எவ்வித அறிக்கையும் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுவதுடன் இப்பொருள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், அதன் மீது சிறப்பு தனிக்கவனம் செலுத்தி தங்களது மண்டலம்/அலுவலகங்களில் ஆளுகையின் கீழ் பணியமர்த்தப்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு மறு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்ட விவரத்தினை ஒட்டு மொத்த அறிக்கையாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் விவரங்களை (குறிப்பாக, பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, வகுப்பு, பணியில் ஈடுபடுத்தப்பட்ட நாள் மற்றும் பணிபுரியும் அலுவலகம்) உள்ளிட்ட விவரங்களை அட்டவணையாக பூர்த்தி செய்து உடனே அனுப்புமாறு மீண்டுமொருமுறை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : wage workers , Casual employee
× RELATED பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 3,407...