×

இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மலேசியாவிலிருந்து அதிக பாமாயில் வாங்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொள்ளும்: இம்ரான் கான்

கோலாலம்பூர்: இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மலேசியாவிலிருந்து அதிக பாமாயில் வாங்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொள்ளும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை மத்திய அரசு ரத்து செய்தது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா, காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்டதாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார். அதுமட்டுமல்லாது, குடியுரிமை சட்ட திருத்தத்தையும் மலேசியா கடுமையாக விமர்சித்தது. இதனால், காலம் காலமாகத் தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய உறவில் சிக்கல் ஏற்பட்டது.

மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய வணிகர்கள் அதைப் புறக்கணித்திருக்கிறார்கள். பாமாயில் இறக்குமதியை வணிகர்கள் புறக்கணித்திருப்பது, மலேசிய பொருளாதாரத்தில் இழப்பை ஏற்பத்தியுள்ளது. காரணம், அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதி மட்டும் 4.5%. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பெருமளவுக்கு இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மலேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் மலேசியாவிலிருந்து அதிக பாமாயில் வாங்க பாகிஸ்தான் தனது சிறந்த முயற்சியை மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.

இவ்விகாரம் குறித்து மேலும் பேசிய அவர், நீங்கள் எங்களுடன் நின்று அநீதியைப் பற்றி பேசியதற்கு பாகிஸ்தான் சார்பாக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். டிசம்பரில் மலேசியாவில் நடந்த முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இஸ்லாத்தின் நற்சிந்தனைகளை பரப்பவும், இஸ்லாமியப் போபியாவை எதிர்த்துப் போராடவும், இளம் முஸ்லிம்களுக்கான எண்ணங்களை வளர்க்கவும் மலேசியாவும், பாகிஸ்தானும் ஒரு கூட்டு ஊடகத் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன, என கூறியுள்ளார். மலேசியாவிலிருந்து கடந்த ஆண்டு பாகிஸ்தான் 11 லட்சம் டன் பாமாயிலை மட்டுமே வாங்கியுள்ளது, அதே நேரத்தில் இந்தியா 44 லட்சம் டன் வாங்கியுள்ளதாக மலேசிய பாமாயில் கவுன்சில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Pakistan ,Malaysia ,Imran Khan , Malaysia, Palm Oil, India, Pakistan, Imran Khan
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...