×

இன்று(பிப்.4) உலக புற்றுநோய் தினம் : வரவே வேண்டாம்... வந்தாலும் கவலை வேண்டாம்

புற்றுநோய்... குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில், யாருக்காவது இந்த நோய் இருப்பதாக கூறினல், ஒருவிதமான பய உணர்வு, பாதிக்கப்பட்டோரை மட்டுமல்ல... சுற்றி உள்ளவர்களையும் அச்சப்பட வைக்கும். அதைப்பற்றி எல்லாம் பெரியதாக எண்ணி வருந்தவேண்டாம்.  குணப்படுத்தும் புற்றுநோய்களும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்காக வந்த தினமே உலக புற்றுநோய் தினம். ஒவ்வொரு ஆண்டும் பிப்.4ம் தேதி இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது என்கிறீர்களா? செல்களின் கூட்டமைப்பால்  உருவானதுதான் மனித உடல். ஒவ்வொரு செல்லும் நம் உடல் இயங்க முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த செல்லானது தனது பணியை முடித்ததும், புதிய செல் உருவாக வேண்டும். ஆனால், அவ்வாறு வளராமல் உடலுக்கு தேவையற்ற செல்கள் ஒருவித திசுக்கட்டிகளாக மாறி உடல்நிலையை பாதிக்க வைக்கின்றன.  இந்த கட்டிகளே புற்றுநோயாக உருமாறுகின்றன. புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. நமது வாழ்க்கை சூழல், சிகரெட், புகையிலை, பான்மசாலா உபயோகிக்கும் பழக்கமே புற்றுநோயை உருவாக்குகிறது. புற்றுநோய் பாதித்தவர்களில் 40 சதவீதம் பேர் புகையிலை பழக்கம் உடையவர்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தவகை போதைப்பொருட்கள் உட்செல்லும்போது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, இவ்வகை பழக்க வழக்கங்களை நிறுத்திக் கொள்வதே சிறந்தது. குடிநீர், காற்று மாசு, சுகாதாரமான சுற்றுச்சூழல் காரணமாக புற்றுநோய் ஏற்படலாம். உடற்பயிற்சியில் ஈடுபடாமல் சோம்பலாக இருப்பது, ஒழுங்கற்ற உணவு முறையாலும் புற்றுநோய் ஏற்படும். எனவே, உடற்பயிற்சி, யோகாசனம் உள்ளிட்டவைகளை வீட்டில் தினமும் செய்வது சிறந்தது. மேலும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சத்துள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டும். தினமும் ஒரு கீரை எடுத்துக் கொள்வது சிறந்தது.

ரத்தப்புற்றுநோய் பொதுவாக நாம் அறிந்தது. அது மட்டுமல்ல... கண், வாய், மார்பகம், கன்னம், மூக்கு, உதடு, தொண்டை, நுரையீரல், உணவுப்பாதை, பெருங்குடல், கர்ப்பப்பை வாய், எலும்பு என புற்றுநோய் நம் உடலில் உள்ள பெரும்பாலான உறுப்புகளில் ஏற்படும். தற்போது இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் அதிகளவில் வருகிறது. புகையிலை பழக்கம் உள்ள ஆண்களுக்கு 45 சதவீதம், பெண்களுக்கு 20 சதவீதம் வாய்ப்புற்று நோய் வருகிறது. வாய்ப்புற்றுநோய்க்கு 90 சதவீதம் புகையிலை, பான் மசாலா பொருட்களே முக்கிய காரணமாக உள்ளன.

2012ம் ஆண்டில் புற்று நோயாளிகள் 14 மில்லியன் பேர் இருந்ததாகவும், பின்னர் அவர்களில் 8.2 மில்லியன் பேர் இறந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் உடனே, அவரது ஆயுள் முடிந்து விட்டது என எண்ணக்கூடாது. முதலில் அவரை தனிமைப்படுத்தக் கூடாது. அவருக்கு பக்கபலமாக இருந்து ஆறுதல் தர வேண்டும். சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். குணப்படுத்தும் புற்றுநோய்களுக்கு தொடர்ந்து, மருந்து, மாத்திரை எடுத்து வந்தால் குணமாகும் வாய்ப்புகள் உள்ளன.

சிகிச்சையை பொறுத்தவரை, கதிர்வீச்சு, அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன மருத்துவ முன்னேற்றங்களைக் கொண்டு புற்றுநோயைக் குணப்படுத்தலாம். முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், மருத்துவத்தின் மூலம் நோயாளியால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும்.

Tags : World Cancer Day , World Cancer Day,Cancer Day,February 4
× RELATED உலக புற்றுநோய் தினத்தையொட்டி,...