×

அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஏழைகளுக்கு கடன் வழங்க மறுக்கும் தேசிய வங்கிகள்: பரிதவிக்கும் பயனாளிகள்

பரமக்குடி: மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 70 சதவீதம் வீடுகள் மூலப்பொருட்கள் விலையேற்றம் மற்றும் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கும் காரணங்களால் கட்டி முடிக்கப்படாமல் உள்ளன. இதனால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் பயனாளிகள் வீடு கட்டி முடிக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியமாக ரூ.2.10 லட்சம் வழங்கப்படுகிறது. வீடு கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்கள் விலையை ஒப்பிடும்போது அரசு வழங்கும் நிதி குறைவாக இருப்பதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் 2016-17 முதல் 2018-19 வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 3000 வீடுகள் வரை மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. 2500க்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட முடியாமல் அதற்கான நிதியை திரும்ப ஒப்படைப்பதற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் உள்ளது. இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மூலப் பொருட்கள் விலையேற்றத்தால் குறைந்தபட்ச வசதிகளுடன் ஒரு வீட்டை கட்டுவதற்கு ரூ.2.10 லட்சம் ரூபாய் போதாது. பயனாளிகள் கூடுதலாக 1.50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அடித்தளம் போட்ட பின்பே நிதி வழங்குவதாலும், வங்கிகள் கடன் வழங்க முன் வராததால் பயனாளிகள் பலர் வீடு கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.

தேசிய வங்கிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க தயங்குகின்றனர். அரசு வழங்கும் மானியத்தை 3 லட்சமாக உயர்த்தினால் மட்டுமே அனைவருக்கும் வீடு திட்டம் முழுமை பெறும்’’ என்றார்.

Tags : banks ,poor , Home for everyone, National Banks
× RELATED ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்...