×

அதிக பாதுகாப்புடன் மஹிந்திரா புதிய கார்

குளோபல் என்சிஏபி (Global NCAP) என்ற அமைப்பு, கார்களை மோதச்செய்து, சோதனைக்கு (Crash Test) உட்படுத்தி, அவற்றின் பாதுகாப்பு தரத்தை கண்டறிந்து சான்றிதழ் அளிக்கிறது. இதில், அதிகபட்சமாக 5 ஸ்டார்களை ஒரு கார் முழுமையாக பெற்றால், அது மிகப்பெரிய விஷயம். இதுவரை 2 ‘’மேட் இன் இந்தியா’’ கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன.அவை இரண்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள்தான். டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகியவைதான் அந்த இரண்டு கார்கள். தற்போது, இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. ஆம், மூன்றாவதாக ஒரு ‘’மேட் இன் இந்தியா’’ காரும் குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை முழுமையாக ஸ்கோர் செய்து, அசத்தியுள்ளது. இம்முறை இந்தியாவிற்கு கவுரவம் தேடித்தந்திருக்கும் நிறுவனம் மஹிந்திரா. குளோபல் என்சிஏபி அமைப்பின் க்ராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) கார், 5 ஸ்டார்களை முழுமையாக வசப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை முழுமையாக பெற்ற மூன்றாவது இந்திய கார் என்ற கவுரவம் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு கிடைத்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரானது, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடல் ஆகும். இந்திய மார்க்கெட்டில் டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, போர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் போட்டியிட்டு வருகிறது. தற்போது, குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்றிருப்பதன் மூலம் இதன் மதிப்பு உயர்ந்துள்ளது.மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார், இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலே அதன் பாதுகாப்பு அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் அழுத்தமாக கூறி வருகிறது. உண்மையில் அதன் செக்மெண்ட்டில், 7 ஏர்பேக் வசதியுடன் கிடைக்கும் ஒரே ஒரு கார் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மட்டுமே. இதுதவிர, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System - TPMS), 5 பயணிகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளையும் இந்த காரில் மஹிந்திரா வழங்குகிறது. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்ஸன் கண்ட்ரோல், ஏபிஎஸ் + இபிடி, நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், ஆண்டி-ரோல்ஓவர் புரோடெக்ஸன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ், பார்க்கிங் கேமரா, ஸ்பீடு அலர்ட்ஸ் மற்றும் ஹில் ஹோல்டு என பல பாதுகாப்பு வசதிகளை வழங்கியுள்ளது.

இந்த கார், இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில், 1.2 லிட்டர்-3 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதேசமயம், 1.5 லிட்டர்-4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். பாதுகாப்பு வசதி மற்றும் சிறப்பான பெர்பார்மென்ஸ் வழங்கக்கூடிய இன்ஜின்கள் உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மிகவும் பிரபலமான மாடலாக திகழ்ந்து வருகிறது. இப்புதிய கார், ₹8.3 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

Tags : Mahindra , Mahindra,new car, high security
× RELATED கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன்,...