×

ப.சிதம்பரத்துக்கு மீண்டும் சிக்கல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு விசாரணை தொடங்கியது : மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி : மேக்சிஸ் வழக்கை டெல்லி நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க தொடங்கி இருப்பதால், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவையின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, சிபிஐ  மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்தது. டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.
 
இதில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கப்பட்ட நிலையில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய புலனாய்வு அமைப்புகள் தொடர்ச்சியாக கால அவகாசம் கோரின. இதன் காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியுடன் விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி நீதிமன்றம் தாமாக இவ்வழக்கில் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. மாவட்ட நீதிபதி சுஜாதா கோஹ்லி முன்பு நேற்று விசாரணை நடந்தது. அப்போது, சிபிஐ, அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்ய 2 வார அவகாசம் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் 4ம் தேதி இவ்வழக்கு விசாரணை மீண்டும் தொடங்க இருப்பதால் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக்குக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : Chidambaram ,Maxis ,Trial , Prosecution of PC Maximus ,Postponement to March 4
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!