×

கியூபா, ஜமைக்கா-வை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஹவானா: கியூபா மற்றும் ஜமைக்கா இடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர நிலநடுக்கங்களை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகவும், 6.1 ஆகவும் இரண்டு நிலநடுக்கங்கள் கியூபா மற்றும் கேமேன் தீவு பகுதிகளில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி குறித்து எச்சரிக்கை விடுத்த பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கம் காரணமாக கடலில் 3.5 அடி வரை அலைகள் உயரும் என்றும், இதன் காரணமாக பெலிஸ், கியூபா, ஹோண்டு ராஸ், மெக்சிகோ, ஜமைக்கா மற்றும் கேமன் தீவுகளின் கடற்கரைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, நிலநடுக்கத்தால், ஆழி பேரலைகள் தாக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் நிலநடுக்கத்திலிருந்து ஏற்பட்ட சேதத்தின் அளவு தெளிவாக இல்லை.

ஆனால் இறப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், ஜமைக்கா மற்றும் மியாமியில் மக்கள் பீதியால் வீடுகளையும், அலுவலங்களையும் விட்டு வெளியேறினர். தொலைதூரத்தில் உள்ள புளோரிடாவில் சுனாமி எச்சரிக்கையால் அச்சம் காணப்பட்டது. 300 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் சுனாமி அலைகள் மிகப்பெரிய அளவில் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் ஆபத்து நீங்கியதாக சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆயினும் இந்த நிலநடுக்கங்களால் உயிர்சேதம் குறித்த விவரம் வெளியாகவில்லை.


Tags : earthquake ,Jamaica ,Cuba ,Tsunami , Cuba, Jamaica, earthquake, tsunami warning
× RELATED கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு