×

ஹைட்ரோகார்பன் எதிர்ப்புக்குரல் டெல்லி வரை கேட்கட்டும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான விவசாயத்தைக் காத்திடுவதற்கான போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி எனப் புகழப்பட்ட மருதநிலத்து மண்ணை பாலை நிலமாக்கும் கொடிய திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக தான்தோன்றித் தனமாக செயல்படுத்த முனைந்துள்ளது. தன்னை விவசாயி என்று பசப்பும் வேடதாரியான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அடிமை அரசு, தமிழ்நாட்டை-குறிப்பாக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டத்திற்குத் துணைபோய்க் கொண்டிருக்கிறது.

காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இத்திட்டத்தினால் காவிரி விளைநிலப் பகுதி பாலைவனமாகும் என்ற அச்சத்தினால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்காமல், சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அரசாணை வெளியிட்டு இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது. வேதாந்தா குழுமமும் இதில் ஈடுபட்டிருப்பதால், அதிமுக அரசும் பதுங்குகிறது. திமுகவும் தோழமைக் கட்சியினரும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நின்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனப் போராடி வருகின்றன. திமுகவின் தலைவர் என்ற முறையில் இதுகுறித்து நான் அறிக்கை வெளியிட்டதும், முதல்வர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதுகிறார். அவருடைய அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கின்ற கருப்பணன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்  நடத்தத் தேவையில்லை என மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். கருத்துக் கேட்கவே தேவையில்லை என்கிறது மாநில அரசு. சுற்றுச்சூழல் அனுமதியே தேவையில்லை என்கிறது மத்திய அரசு.

இரு அரசுகளும் கூட்டணி அமைத்துக் கொண்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்து வாழ்வாதாரத்தைப் பறிக்கிறது. இந்த வஞ்சகத்தையும் சதியையும் அம்பலப்படுத்தி, அதிமுக ஆட்சி அமைந்த இந்த 8 ஆண்டுகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி பாதிப்படைந்திருப்பதையும், நீர்நிலைகள் தூர்வாரப் படாததையும், விவசாயிகளின் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படாததையும் எடுத்துரைத்து, விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கு திமுக தொடர்ந்து பாடுபடுகிறது. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநிலஅரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஹைட்ரோகார்பன் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் ஒப்பந்தங்கள் தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.அதற்கான அறப்போர்க் களம் தான் ஜனவரி 28ம் நாள். விவசாயிகளின் விரோதியான மத்திய பாஜக-மாநில அதிமுக அரசுகளைக் கண்டித்து 5 மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தஞ்சை வடக்கு-தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும், புதுக்கோட்டை வடக்கு  தெற்கு மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலிலும், கடலூர் கிழக்கு மேற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும், நாகை வடக்கு தெற்கு மாவட்டக் கழகங்கள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், அவரி திடலிலும், திருவாரூர் மாவட்டக் கழகம் சார்பில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் என எழுச்சிமிகு போராட்டங்கள் நடைபெற இருக்கிறது.

தலைவர் கலைஞரின் அன்பு தொண்டர்களே... உலகிற்கே சோறிடும் உழவர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் இது. இந்த அறப்போர்க் களத்தில் திமுகவின் அனைத்து அமைப்புகளையும் இணைத்துப் பெருந்திரளாகக் கூடுங்கள். தோழமைக் கட்சியினரைத் துணைக் கொள்ளுங்கள். விவசாயப் பெருமக்களைத் திரட்டுங்கள். இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், சமூக நலத்தில் அக்கறையுள்ளோர் என அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும், காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாத்திடவும், உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாணவும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிடவும் ஒன்று திரள்வீர். உரிமைக்குரல் எழுப்புவீர். கோட்டையில் கொலு பொம்மைகளாக வீற்றிருப்போரின் செவிகள் அதிரட்டும். டெல்லிவரை எதிரொலிக்கட்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,Delhi ,Volunteers ,Anti-Voice , Hydrocarbon, Anti-Voice, Let The Delhi Ask, Volunteers, MK Stalin, Letter
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...