கீழ்வேளூர்: வேளாங்கண்ணியில் அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த இலவச வேட்டி, சேலைகளை வருவாய்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மரியாஹோட்டல், பூக்காரத்தெரு சுனாமி குடியிருப்பு ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு குடும்பஅட்டைதாரர்களுக்கு விநியோகிக்க 950 இலவச வேட்டி, 950 சேலைகள் கடந்த 22ம் தேதி வழங்கப்பட்டது. இதில் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கியுள்ளதாகவும், மீதியை அ.தி.மு.க. வார்டு செயலாளர் விநாயமூர்த்தி என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கீழ்வேளூர் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி வருவாய் ஆய்வாளர் மருதுபாண்டியன் சம்பந்தப்பட்ட ரேசன்கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்க வில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர் விநாயகமூர்த்தி வீட்டில் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்ட போது அங்கு தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி ஒரு மூட்டையிலும், மற்றொரு மூட்டையில் புடவையும் இருந்தது. இந்த இரண்டு மூட்டைகளையும் கைப்பற்றிய வருவாய் ஆய்வாளர், வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.