×

தேர்வு எழுதுவது எந்த பள்ளியில் உச்சகட்ட குழப்பத்தில் 5, 8ம் வகுப்பு மாணவர்கள் : இருவேறு அறிக்கைகளால் கல்வித்துறை அதிகாரிகள் திணறல்

சென்னை: தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை மற்ற பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் என்பதால் இந்த ஆண்டு மேற்கண்ட வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தேர்வு நடக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக தொடக்க கல்வித்துறை சில வழிகாட்டு நெறிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009ம்  ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பின்னர் 2019ம் ஆண்டு அதில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பின்பற்றி தேர்வு நடத்த வேண்டும்.  தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து தேர்வு மையத்துக்கு அதிக தூரம் பயணம் செய்து சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் 1 கிமீ தூரத்துக்குள் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும், 3 கிமீ தூரத்துக்குள் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும்  தேர்வு மையங்களை அமைக்க வேண்டும். அதற்கான போக்குவரத்து வசதிகள், போதுமான இட வசதிகள் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேனிலை, சுயநிதி மழலையர்  மற்றும் தொடக்கப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, இது  குறித்து ஊடங்களில் செய்தி வெளியாகி பொதுமக்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் வந்தன. அதனால், மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கடந்த 9ம் தேதி தெரிவித்தார். தொடக்க கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தேர்வு மையங்கள் அமைய வேண்டிய தூரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் பேட்டியில் அதே பள்ளிகளில் தேர்வு எழுதுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதில் எதை பின்பற்றுவது என்று கல்வித்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் கேட்டு ஆணைகளை வெளியிட வேண்டும். குழப்பங்கள் இல்லாத வகையில் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவிலேயே இல்லை

5,8ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத இந்த தேர்வு  முறையை தமிழகத்தில் மட்டும் அவசரமாக நடத்தி மாணவர்களின் எதிர்காலக் கனவை சிதைக்க அரசு முயற்சிக்கிறது. ஏழை எளிய மாணவர்–்களின் நலன் கருதி உடனடியாக 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மாநில அரசும் பள்ளிக் கல்வித்துறையும் கைவிட வேண்டும். இதே கருத்தை பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். பல்வேறு  ஆசிரியர் சங்கங்களும் இந்த கருத்தை வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறைக்கு மனு கொடுத்துள்ளனர்.

Tags : graders ,school ,Education department officials , 5th and 8th graders , highest level, confusion at any school
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...