புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின்னர், மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தில் கிட்டத்தட்ட எட்டு மாதங்களை நிறைவு செய்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சரவையில் மறுசீரமைப்பு மற்றும் புதிதாக சில அமைச்சர்கள் பொறுப்பு சிலருக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 31ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக கூறப்படுவதையொட்டி, தொழில்நுட்ப பின்னணி கொண்டவர்களை அமைச்சரவையில் இடம்பெற வைக்க மோடி விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்ட புதிய அபிவிருத்தி வங்கித் (பிரிக்ஸ்) தலைவரும், ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்போசிஸின் தலைவராகவும் இருந்த கே.வி.காமத் (72) மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா (64) ஆகியோரை தனது அமைச்சரவையில் பிரதமர் மோடி சேர்க்கக்கூடும் என்று தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கே.வி.காமத்தை நிதித்துறை இணை அமைச்சராகவும், தாஸ்குப்தாவை மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சராகவும் ஆக்கக்கூடும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமின்றி நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்தும் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும், முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் முதல் ஆட்சி காலத்தில், தொழில்நுட்ப வல்லுநர்களாக அடையாளம் காணப்பட்ட ஹர்தீப் பூரி, அல்போன்ஸ், எம்.ஜே.அக்பர் ஆகியோர் தற்போது பதவியில் இல்லை. மோடி அமைச்சரவையில் வடமாநிலங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மங்களூருவை சேர்ந்த கே.வி.காமத் நியமனம் மூலம் தென்மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வாய்ப்புள்ளது. ேமலும், மத்திய குழந்தைகள் நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைச்சரும், ஜவுளித்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானியும், ரயில்வே அமைச்சரும் மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சருமான பியூஷ் கோயல் ஆகியோர், தலா 2 முக்கியமான கேபினட் துறைகளை கவனித்து வருகின்றனர். அதனால், அவர்களிடம் இருந்து தலா ஒரு அமைச்சகத்தை பிரித்து வேறொருவருக்கு வழங்க முடிவு செய்து இருப்பதாகவும், இணை அமைச்சர்களில் சிலரது செயல்திறன் சிறப்பாக இல்லாததால், அவர்களின் அமைச்சர் பதவி பறிக்க வாய்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.