×

இந்தியா - ஜப்பான் கடலோர காவல்படை கூட்டு பயிற்சி கப்பல்களின் எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டில் 200 ஆக அதிகரிக்க திட்டம்: தலைமை இயக்குனர் கே.நடராஜன் பேட்டி

சென்னை: இந்தியா - ஜப்பான் கடலோர காவல்படையின் கூட்டுபயிற்சி வங்க கடலில் நடந்தது. இதில் கலந்துகொண்ட இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் நடராஜன், 2025ம் ஆண்டுக்குள் கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியா-ஜப்பான் 19வது கூட்டுப்பயிற்சி இந்த ஆண்டு சென்னையில் நடந்து வருகிறது. இதற்காக ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘ஏசிக்கோ’ என்ற கப்பல் 13ம் தேதி சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலின் கேப்டன் கொய்சோ கர்டா தலைமையில் 60 பேர் கொண்ட குழு கூட்டு பயிற்சியில் ஈடுபட்டது. இருநாட்டு கப்பல்களும் இணைந்து ‘சாயோக் கஜின்’ என்ற பெயரில் நடுக்கடலில் நேற்று கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர்.

டார்னியர் ரக விமானங்கள், இரு நாட்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான  ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன. இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் நடராஜன், ஜப்பான் கடலோர காவல்படை கமாண்டர் டக்காகிலோ ஒக்குஷிமா, கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை தளபதி பரமேஷ், ஜப்பான் கப்பல் கேப்டன் கியோசி ஹாராடா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன்பிறகு கே.நடராஜன் பேட்டியளிக்கையில், ‘‘இந்திய கடலோர காவல் படையில், துவக்கத்தில் 45 கப்பல்களும், 40 விமானங்கள் மட்டுமே இருந்தன. இது தற்போது, 145 கப்பல்கள், 62 விமானங்களாக அதிகரித்துள்ளன. இதை தவிர்த்து ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், 50 கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. 12025ம் ஆண்டுக்குள், கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆகவும், விமானங்களின் எண்ணிக்கையை 100 ஆகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். கூட்டுப்பயிற்சி இன்று நிறைவுபெறுகிறது.

Tags : Japan Coast Guard ,India ,K. Nadarajan ,Japan , India - Japan, Coast Guard, Joint Training
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!