×

மின்வாரிய பணியாளர்கள் தேர்வு வயது வரம்பு நிர்ணயிப்பதில் அநீதியை களைய வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரும், உதவிப் பொறியாளர் பணிக்கு 600 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பிக்க பொதுப் பிரிவினருக்கு 30 வயது, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 32 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர இளநிலை உதவியாளர் (கணக்குகள்) பணிக்கு 500 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களில் பொதுப்பிரிவினருக்கு 30 வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. உதவிப் பொறியாளர், கணக்கீட்டாளர் பணிகளில் அனைத்துப் பிரிவினருக்கும், இளநிலை உதவியாளர் பணிக்கு பொதுப்பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு எவ்வகையிலும் நியாயமற்றது.

 மின்வாரிய பணிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்புகள் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து நிர்ணயிக்கப்பட்டவை அல்ல என்றே தோன்றுகிறது. மின்வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு கேங்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட போது, அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 37 ஆகவும், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 40 ஆகவும் இருந்தது.  ஒரே ஆண்டில் அதிகபட்ச வயது வரம்பை அனைத்துப் பிரிவினருக்கும் தலா 5 ஆண்டுகள் குறைத்தது நியாயமற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சில போட்டித் தேர்வுகளை எழுத இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக உள்ளது. பல தேர்வுகளுக்கு வயது வரம்பு இல்லை.

 மேற்கண்ட அம்சங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து மின்வாரியப் பணியாளர் தேர்வில் அதிகபட்ச வயது வரம்பை நிர்ணயிப்பதில் இழைக்கப்பட்டுள்ள அநீதியை அரசு களைய வேண்டும். அனைத்து பணிகளுக்கும் அதிகபட்ச வயதை குறைந்து 5 ஆண்டுகள் உயர்த்த மின்வாரியம் முன்வர வேண்டும்.

Tags : Ramadas ,government ,Electricity Staff ,Tamil Nadu ,Selection , Selection , Electricity Staff, Setting of Age Limit
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...