×

கொளத்தூர் தொகுதியில் பொங்கல் பரிசு வழங்கும் விழா 2021ம் ஆண்டில் திமுக ஆட்சிதான்: ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில், திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 1508 பேருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தல் வெற்றியில் தொடங்கி, உள்ளாட்சி தேர்தல் வரை திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்றால், திமுக வெற்றியை நிச்சயம் தடுத்து இருப்பார்கள்.

அண்மையில் நான் அந்தமான் சென்றேன், அங்கும் நம் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கிறது. நாங்கள் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்து இருந்தால் நிறுத்தி இருக்க முடியுமா?, திமுகவின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதிமன்றம் தேர்தலில் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது, இதை வைத்து பார்த்தால் ஆளும் அதிமுக அரசு நகர்ப்புற தேர்தலை நடத்துமா என்பது சந்தேகமாக உள்ளது.

நகர்ப்புற தேர்தல் நடைபெற்று இருந்தால் சென்னையில் திமுகவை சேர்ந்த ஒருவர் தான் மேயர் பதவி வகித்திருப்பார். ஆளும் அதிமுக அரசு ஊடகங்களை மிரட்டி திமுகவிற்கு எதிராக செய்தியை போட வைக்கிறார்கள். இதற்கெல்லாம் நிச்சயம் மாற்றம் பிறக்கும். 2021ம் ஆண்டில் திமுக ஆட்சி தான்.  இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வடச்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, ரங்கநாதன் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கிரிராஜன், தேவ ஜவகர்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Pongal ,constituency ,DMK ,Kolathur ,Stalin ,speech , Stalin's speech , Pongal prize , giving , ceremony
× RELATED அயோத்தி அடிக்கல் நாட்டு விழாவில்...