×

பொங்கல் பண்டிகைக்காக பாளை சிறையில் பயிரான கரும்புகள் அறுவடை

நெல்லை: பாளை மத்திய சிறையில் பயிர் செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் கரும்புகள் பொங்கல் பண்டிகைக்காக நன்னடத்தை கைதிகள் மூலம் அறுவடை செய்யப்பட்டது. இவை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் சுமார் 1400 பேர் உள்ளனர். இதில் தண்டனை கைதிகளில் 150 நன்னடத்தை கைதிகள் மூலம் 25 ஏக்கர் விளைநிலத்தில் கரும்பு, வாழை, நெல், தென்னை, காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு சிறை பயன்பாட்டுக்கு போக மீதி பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சிறை வளாகத்தில் கரும்பு பயிர் செய்யப்பட்டிருந்தது. கரும்பு நல்ல விளைந்த நிலையில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நன்னடத்தை கைதிகளை கொண்டு அறுவடை செய்யும் பணியை சிறைத்துறை டிஐஜி பழனி நேற்று காலை துவக்கி வைத்தார். மேலும் சிறைத்துறை சார்பில் நடத்தப்படும் பொங்கல் கோலப்போட்டி மற்றும் சிறை பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகளையும் அவர் பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பாளை மத்திய சிறையில் நன்னடத்தை கைதிகள் மூலம் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் நெல், காய்கறிகள், வாழை, பனங்கிழங்கு உள்ளிட்டவைகள் சிறை பயன்பாட்டிற்கு போக மீதி பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது 40 சென்ட் நிலப்பரப்பில் கரும்பு பயிர் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு அறுவடை நடந்தது. சுமார் 5 அடி உயரம் கொண்ட 10 ஆயிரம் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி கைதிகளுக்கு தலா ஒரு கரும்பு வழங்கப்படும். இதுபோக மீதி உள்ள கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். தமிழகம் முழுவதும் உள்ள சிறைத்துறை குடியிருப்புகளில் பொங்கல் சிறப்பு கோலப்போட்டி, சிறைத்துறை பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி நடக்கிறது. மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றியாளர்களை சென்னை சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்.  பாளை மத்திய சிறையில் விரைவில் எண்ணெய் ஆலை, தேனீ வளர்ப்பு துவக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Harvesting ,festival ,Pallai prison ,Pongal ,Pongal Festival ,The Pali Prison , Pongal festival, the Pali Prison, Crop Cane, Harvest
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு