×

தேர்வுக்கு முன்பே வெளியாகும் வினாத்தாள்கள் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி; மாணவர்கள் மகிழ்ச்சி

கோவை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் நடந்தது. இதில், 9ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு 2 நாட்கள் முன்பே இணையதளத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து பிளஸ்-1, பிளஸ்-2 வேதியியல் பாட வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இது தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானததைத்தொடர்ந்து மாற்று வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த விவகாரம் முடிவதற்குள், தற்போது பிளஸ்-2 முதல் திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு வெளியாகும் வினாத்தாள்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தது என தெரியாமல் மாவட்ட அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர். கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகத்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த செயல் மாணவர்களின் கல்வி அறிவை பாதிக்கும் எனவும், அவர்களுக்கு தேர்வின் மேல் உள்ள நாட்டம் குறையும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து கலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: தேர்வுக்கு முன்பு வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இது மாணவர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, முழு ஆண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் இது போன்று வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள்கூட குறைந்த மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. தேர்வுகள் வைப்பது மாணவர்கள் பாட புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்பதற்குத்தான். ஆனால், வினாத்தாள் வெளியாவதால் குறிப்பிட்ட விடைகளை மட்டுமே மாணவர்கள் படிக்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும், தேர்வு அறையில் வினாத்தாள் மாற்றம் செய்து கொடுத்தால், மாணவர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வினாத்தாள் வெளியாகும்போது மாற்று வினாத்தாளை உடனடியாக தயார் செய்ய ஆசிரியர்களும் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்க கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வினாத்தாள்களை வெளிவிடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வினாத்தாள்கள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் கல்வித்துறை அதிகாரிகள், இதனை ஒரு முக்கிய பிரச்னையாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூறுகையில், வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகி அது கையில் கிடைத்தால் ஜாலிதான். அவ்வாறு கிடைத்து திடீரென வேறு வினாத்தாள் கொடுத்தாலும் தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும். ஆனால் ெவளியான வினாத்தாள் தேர்வில் வந்தால் நல்லது என நினைக்கிறோம் என்றனர்.

Tags : Education officials ,Academia , Academia
× RELATED அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசு நிதியில்...